தமிழ்நாடு

tamil nadu

காணாமல் போக ஓடை என்ன மளிகைப் பொருளா? - அமைச்சர் சேகர் பாபு

By

Published : Oct 27, 2021, 9:41 AM IST

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு தொடர்பான காணொலி
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு தொடர்பான காணொலி

காணாமல் போவதற்கு திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலுக்கு சொந்தமான ஓடை நிலம் மளிகைப் பொருளல்ல என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

திருவாரூர்: உலக புகழ்பெற்ற திருவாரூர் கமலாலயக் குளத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம்(அக்.25) பெய்த கனமழையின் காரணமாக சரிந்து விழுந்தது. இந்நிலையில் சரிவு ஏற்பட்ட இடத்தை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று (அக்.26) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் கமலாலயக் குளத்தின் ஒரு கரை சரிந்து விழுந்ததை கேள்விப்பட்டவுடன், விழுந்த கரைகளை உடனடியாக அப்புறப்படுத்தி பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு தொடர்பான காணொலி

திமுக ஆட்சியில் சிலைகள் மீட்பு

இடிந்து விழுந்த மதில் சுவரை முழுமையாக கட்டவும், ஒட்டுமொத்தமாக கமலாலயக் குளத்தின் மதில் சுவரின் ஸ்திரத் தன்மையை ஆராய்ந்து நிரந்தர தீர்வு காணவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தியாகராஜர் திருக்கோயிலுக்கு சொந்தமான ஓடை காணாமல் போவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

காணாமல் போக இது ஒன்றும் மளிகைப் பொருள் அல்ல. இடம் அங்கேயேதான் இருக்கும். குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளை விட, ஐந்து மாத திமுக ஆட்சியில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திமுக ஆட்சி முழுவதுமாக ஓராண்டு நிறைவு பெறுகையில், வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சிலைகள் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும். கமலாலய குளத்திற்கு என்று நீண்ட நெடிய வரலாறு உள்ளது. கருணாநிதி விளையாடிய இடம் இது. சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

இதையும் படிங்க:மகளுக்கு தாய் பெயரை இனிஷியலாக வைக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை அனுமதி

ABOUT THE AUTHOR

...view details