தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உத்தராயண புண்ணியகால உற்சவம்: அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றத்துடன் துவக்கம்!

Tiruvannamalai Annamalaiyar temple: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால உற்சவத்திற்கான கொடியேற்றம் நடைபெற்றது.

Tiruvannamalai Annamalaiyar temple
அண்ணாமலையார் திருக்கோயிலில்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 10:43 AM IST

அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றம்

திருவண்ணாமல: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கக் கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இந்த நிலையில், அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்தராயண புண்ணியகால உற்சவத்தை முன்னிட்டு, சுமார் 63 அடி உயரம் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க இன்று (ஜன.6) கொடியேற்றம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து சுமார் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு நாளும் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அலங்காரத்துடன் கோயிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அருள்பாலிப்பர். அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுக்கு 4 முறை கொடியேற்றம் நடைபெறும்.

அதாவது, ஆடி மாதத்தில் தட்சிணாயன புண்ணியகால உற்சவமும், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை மகா தீபத்தின் போதும், ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோர்சவ உற்சவமும், மார்கழி மாதத்தில் உத்தராயண புண்ணியகால உற்சவம் ஆகியவை என ஆண்டுக்கு 4 முறை கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று மார்கழி மாத உத்தராயன புண்ணிய கால உற்சவத்தை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலின் உட்பிரகாரத்தில் விநாயகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. அதன்பின், அலங்காரத்துடன் 63 அடி உயரமுள்ள தங்க கொடிமரம் அருகே எழுந்தருளிய சுவாமிகள் மத்தியில் இன்று காலை சரியாக 6.20 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அலங்காரத்துடன் திட்டு வாசல் வழியாக வெளியே சென்று திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். பத்தாம் நாளான 'தைப்பொங்கல்' அன்று தாமரைக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று 10ம் நாள் உற்சவம் இனிதே நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் மார்கழி மாத உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 15 லட்சம் வசூல்!

ABOUT THE AUTHOR

...view details