தமிழ்நாடு

tamil nadu

நெல்லையில் பயங்கரம்: மணிக்கட்டுகளை துண்டித்து நண்பனை கொன்ற சக நண்பர்கள்

By

Published : Jun 15, 2023, 6:41 PM IST

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் என்பவர், தனது நண்பர்களுடன் மது அருந்தியதாகத் தெரிகிறது. அப்போது போதையின் உச்சகட்டத்தில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த இதர நண்பர்கள் அஜித்தின் இரு கை மணிக்கட்டை அரிவாளால் துண்டித்தும், தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கொடூரமாக அரிவாளால் வெட்டி உள்ளனர்.

young man murder
young man murder

நெல்லை: நெல்லை மாவட்டம், பழவூரைச் சேர்ந்தவர், ஐயப்பன். இவரது மகன் அஜித் (25). பெயிண்டிங் வேலை செய்து வந்த இவருக்கு நெருங்கிய நண்பர்களுடன் இருந்த நட்பு காரணமாக அடிக்கடி அவர்களுடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல், அஜித் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பழவூர் பெரியகுளம் அருகில் உள்ள புது காலனி பகுதியில் மது அருந்தியதாகத் தெரிகிறது. அப்போது போதையின் உச்சகட்டத்தில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த இதர நண்பர்கள் அஜித்தின் இரு கை மணிக்கட்டை அரிவாளால் துண்டித்தும், தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கொடூரமாக அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் அஜித் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பழவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவ இடத்தில் டி.எஸ்.பி யோகேஷ் குமார் தலைமையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர் என்று கூட பார்க்காமல் இரண்டு கை மணிக்கட்டுகளையும் துண்டித்து மிக கொடூரமாக அஜித் கொல்லப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மது அருந்தும் இடத்துக்கு குற்றவாளிகள் அரிவாள் கொண்டு வந்தது ஏன் என்ற கேள்வியும் போலீசாருக்கு எழுந்துள்ளது.

இதையும் படிங்க:தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு: போலீஸார் விசாரணை!

எனவே, முன்கூட்டியே திட்டமிட்டு அஜித்தை தீர்த்துக்கட்டும் நோக்கத்தோடு தான் அவரது நண்பர்கள் அஜித்தை மது அருந்த அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறு மட்டும் கொலைக்கான காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே அஜித் கொல்லப்பட்டதற்கான உண்மையான காரணத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து கிடைத்த முதல்கட்ட விசாரணையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும்போது, நான் பெரியவனா நீ பெரியவனா என்ற பேச்சு எழுந்துள்ளது. அப்போது, அஜித், அவரது நண்பர்களை மது போதையில் தரக்குறைவாக திட்டியதாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நண்பர்கள் சேர்ந்து அஜித்தை சரமாரியாக வெட்டி, கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. எனவே, அஜித்தின் நண்பர்கள் யார் என்ற விவரங்களை, போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மேலும், அவரது நண்பர்களின் தொலைபேசி எண்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த கொலை விவகாரத்தில், கொலைக்குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண் அடையப்போவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், வள்ளியூர் நீதிமன்றத்தில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வழக்கு வாய்தாவுக்காக பெண்ணிடம் செயின் பறிப்பு.. கழிவறையில் வழுக்கி விழுந்த இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details