திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த அம்பிகாவதி என்பவரின் மகன், வள்ளியூர் அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆக.9 ஆம் தேதி இவருடன் படித்து வரும் சக மாணவர்கள் மூன்று பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அம்பிகாவதியின் வீட்டிற்குள் நுழைந்து, அவரது மகனைச் சரமாரியாகத் தாக்கினர். தடுக்கச் சென்ற மாணவரின் தங்கையையும் தாக்கிவிட்டு அக்கும்பல் தப்பி ஓடியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இது குறித்துக் காவல் துறையினரின் விசாரணையில் சாதிய பிரச்சனையால் அம்பிகாவதி மகனை, அவருடன் படித்து வரும் சக மாணவர்களே கொடூரமாகத் தாக்கியது தெரியவந்தது. குறிப்பாகப் பாதிக்கப்பட்ட மாணவரை வேறு சாதியைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து சாதி ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அதை மாணவன் மற்றும் அவரது தாய் அம்பிகாவதி பள்ளி நிர்வாகத்திடம் புகாராகத் தெரிவித்த காரணத்தினால், ஆத்திரமடைந்த சக மாணவர்கள் திட்டமிட்டு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இது குறித்து, நாங்குநேரி காவல் துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். மாணவர்கள் 18 வயது நிரம்பாதவர்கள் என்பதால் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.