தமிழ்நாடு

tamil nadu

தகாத உறவை கண்டித்த மனைவி - கொன்று புதைத்த கணவர்!

By

Published : Mar 12, 2022, 10:51 PM IST

நெல்லையில் தகாத உறவை கண்டித்த மனைவியை ராணுவ வீரரான அவரது கணவர் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

army-soldier-arrested-for-killing-wife-in-nellai
army-soldier-arrested-for-killing-wife-in-nellai


நெல்லை :திருக்குறுங்குடி கீழ ரத வீதியை சேர்ந்தவர் மாரியப்பன்-பிரேமா தம்பதியினர். இருவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிய நிலையில் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. மாரியப்பன் டெல்லியில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனையறிந்த, பிரேமா மாரியப்பனை கண்டித்துள்ளார். மேலும், மாரியப்பன், வீட்டுச்செலவுக்கு முறையாகப் பணம் கொடுக்காததால், கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 11) மாரியப்பன் பிரேமாவை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் திருநெல்வேலியில் இருந்து களக்காடு வழியாக திருக்குறுங்குடி வந்து கொண்டிருந்த நிலையில், அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், பிரேமாவை மாரியப்பன் திருக்குறுங்குடி பெரிய குளத்திற்கு அழைத்து சென்று அடித்து கொலை செய்து மண்ணில் புதைத்துள்ளார்.

இன்று (மார்ச் 12) திருக்குறுங்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரனிடம், மனைவி பிரேமாவை கொலை செய்து மண்ணில் புதைத்து வைத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, உடனடியாக ராமச்சந்திரன் திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், பிரேமாவின் உடல் இன்று திருக்குறுங்குடி குளத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும், ராணுவ வீரர் மாரியப்பனை திருக்குறுங்குடி காவல்துறையினர் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், மாரியப்பன் ஏற்கனவே தான் வேலை பார்க்கும் இடத்தில் தகராறு செய்து அதன் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தகாத உறவை கண்டித்த மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் - இதுதான் காரணமா?

ABOUT THE AUTHOR

...view details