தமிழ்நாடு

tamil nadu

கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா - பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் என்னென்ன?

By

Published : Apr 17, 2023, 7:44 PM IST

தேனி மாவட்டம் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கேரள மாநிலம் தேக்கடியில் கண்ணகி கோயிலின் சித்திரை முழு நிலவு விழா குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

செய்தியாளர்களைச் சந்தித்த தேனி ஆட்சியர்

தேனி:தமிழ்நாடு - கேரள எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று மங்கலதேவி கண்ணகிக்கு கோயில் திருவிழா நடைபெறும். கண்ணகி கோயிலுக்குச் செல்வதற்கு தமிழ்நாடு பகுதியான பளியன்குடி வழியாக மலைப்பாதையில் 6 கி.மீ., தொலைவு நடைபயணமாக செல்ல வேண்டும்.

கேரளா வழியாக குமுளியில் இருந்து ஜீப் மூலம் 12 கி.மீ., பயணம் செய்ய வேண்டும். தமிழகம் மற்றும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இத்திருவிழா ஏற்பாடுகளை தமிழ்நாடு மற்றும் கேரள அதிகாரிகள் ஆகியோர்களால் இணைந்து நடத்தப்படும்.

இவ்வாண்டு வரும் மே 5ஆம் தேதி திருவிழா நடைபெறுவதைத் தொடர்ந்து கேரள மாநிலம், இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா ஆகியோர் தலைமையில் திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கேரள மாநிலம் தேக்கடியில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காவல் துறை கண்காணிப்பாளர்கள், கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள், இடுக்கி மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர், வன அலுவலர்கள், போக்குவரத்து துறை உள்ளிட்ட இரு மாநில அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

கண்ணகி கோயில் பகுதி அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக வனவளம் பாதிக்காதவாறு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்குத் தண்ணீர், சாலை வசதி, கழிப்பிட வசதி மற்றும் மலைப்பாதையில் ஏறி வரும் பக்தர்களுக்கு மருத்துவம், சாப்பாடு உள்ளிட்ட அனைத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு, பேருந்து வசதிகள் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டு அனைத்து வசதிகள் செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கூட்டத்தில் கண்ணகி அறக்கட்டளை சார்பாக கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அதிகப்படியான உணவு ஏற்பாடு செய்ய வேண்டும்; கோயிலுக்கு செல்லும் ஜீப்களுக்கு வழங்கப்படும்; அனுமதிச் சீட்டினை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கடந்த காலங்களில் காலை 6:00 மணி முதல் மதியம் 2 மணி வரை வனச்சாலைகள் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தரிசனம் முடிந்த பக்தர்கள் கண்ணகி கோயில் மலையிலிருந்து 5 மணிக்குள் கீழே இறங்க அனுமதிக்கப்பட்டனர். இந்த முறை பக்தர்களுக்கு வனச்சாலை வழியாக தரிசனத்திற்கு செல்ல காலை 6 மணி முதல் மதியம் 2:30 மணி வரையும், தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்கள் மாலை 5.30 மணி வரையும் அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கண்ணகி கோயில் தரிசன நேரம் ஒரு மணி நேரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக,
கூட்டம் முடிவிற்குப் பின் செய்தியாளர்களிடம் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் தேக்கடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். மேலும் கண்ணகி கோயிலில் பூஜை, பொங்கல், அன்னதானம் உள்ளிட்டவைகள் அறநிலையத்துறை சார்பில் நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் முடிவு அறிவிக்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மங்கலதேவி கண்ணகி கோயிலில் இதுவரை பூஜைகள், அன்னதானம், பூஜைகள் உள்ளிட்டவை தமிழக - கேரளா கண்ணகி அறக்கட்டளையினர் சார்பில் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை மே ஐந்தாம் தேதி நடக்கும் சித்திரை முழு நிலவு விழாவில் அன்னதானம் பொங்கல், பூஜைகள், ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படுமா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடப்படும் என தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்தார்.

இதையும் படிங்க:16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஆசிய ஹாக்கி கோப்பை போட்டி - அமைச்சர் உதயநிதி

ABOUT THE AUTHOR

...view details