ETV Bharat / state

16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஆசிய ஹாக்கி கோப்பை போட்டி - அமைச்சர் உதயநிதி

author img

By

Published : Apr 17, 2023, 5:53 PM IST

சென்னையில் ஆசிய ஹாக்கி கோப்பை போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்க உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Minister Udyanithi
அமைச்சர் உதயநிதி

சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்டது. இந்நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஆசிய ஹாக்கி கோப்பை போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் நிகழ்ச்சி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலோ நாத் சிங், தமிழ்நாடு விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஹாக்கி இந்தியா பொதுச்செயலாளர் போலோ நாத் சிங், ”ஹாக்கி என்றாலே அது ஒடிசாவில் தான் நடைபெறும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், தமிழ்நாட்டிலும் சர்வதேச ஹாக்கிப் போட்டிகள் நடத்த மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இனி, நாங்களும் தொடர் ஒத்துழைப்பை வழங்கி, தொடர்ந்து தமிழ்நாட்டில் சர்வதேச ஹாக்கி போட்டிகள் நடத்த அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொள்வோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, "முதலமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் ஒடிசாவில் நடைபெற்ற ஹாக்கி உலகக்கோப்பைக்கு, தமிழ்நாட்டில் இருந்து துறை சார்ந்தவர்கள் சென்று பார்த்தோம். அப்போது தான் தமிழ்நாட்டில் இதுபோல ஹாக்கி போட்டிகள் நடத்த வேண்டும் எனத் திட்டமிட்டோம். ஆசிய ஹாக்கி கோப்பைத் தொடர் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆடவருக்கான ஆசிய ஹாக்கி கோப்பைத் தொடர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது

முதலமைச்சர் ஸ்டாலின் விளையாட்டுத்துறை மீது தனிக் கவனம் செலுத்தி வருகிறார். நேரம் இருந்தால் அவரே போட்டியை தொடங்கி வைப்பார். இந்த ஹாக்கி தொடருக்காக இனி தான் நிதி ஒதுக்கப்படவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை போன்று இதனை தமிழ்நாடு மக்கள், மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல தனி கவனம் செலுத்துவோம். இப்போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் பங்கேற்பது தேர்வுக் குழுவின் முடிவைப் பொறுத்தே அமையும். போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறையுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ரூ.2,302 கோடி முதலீட்டில் தைவான் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.