தஞ்சாவூர்: கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், கும்பகோணம் அருகேயுள்ள ஆரியப்படை வீடு ஊராட்சி சமத்துவபுரத்தில் நேற்று இரவு கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனை திமுக ஒன்றியச் செயலாளரும், தஞ்சை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் எஸ்.கே முத்துச்செல்வம் தலைமை தாங்கினார். இதில் அரசு தலைமை கோவி செழியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திமுகவை யாராலும் அழித்து விட முடியாது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. 2015இல் இருந்து 2023 வரை அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது? மக்கள் மத்தியில் திமுக அமைச்சர் கைது என போட்டு திமுக மீது களங்கத்தை ஏற்படுத்தினார்கள்.
ஆனால், அவர் கைது செய்யப்பட்டது 2015இல் நடைபெற்றதற்காக மட்டுமே. அவர் திமுகவிற்கு வந்த பிறகு அதனை திரும்பி கொடுத்து விட்டார். சென்னை உயர் நீதிமன்றமும் அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. திமுக மீது மோதி வழக்கு போட்டு யாரும் ஜெயிக்க முடியாது. அதுபோல திமுக போட்ட வழக்குகளில் இருந்து யாரும் தப்பிக்கவும் முடியாது.
உதாரணம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை கேட்டால் தெரியும். எம்ஜிஆர் தொடங்கி வந்தவன், போனவன், புதிதாக கட்சி தொடங்குபவன் என எல்லோருமே திமுகவை ஊழல் கட்சி என்றே கூறி வந்தனர். இதுவரை எந்த ஒரு வழக்கிலும் திமுக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றதில்லை.