தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது புளியரை கிராமம். இங்கு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் ரப்பர் விவசாயம் செய்யப்படுகிறது. ரப்பர் விவசாயத்தை பொறுத்தவரை, அவ்வளவு எளிதில் வருவாய் ஈட்டிவிட முடியாது. ஒரு மரத்தை பயிரிட்டு, சுமார் 8 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகுதான், அதிலிருந்து பால் எடுத்து வருவாய் ஈட்ட முடியும்.
மலையடிவார பகுதி என்பதாலும், வனவிலங்குகளால் இவ்வகை பயிர்களுக்கு சேதம் இல்லை என்பதாலும் இங்குள்ள விவசாயிகள் ரப்பர் தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இப்பகுதியில் மட்டும் ஆண்டிற்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் லிட்டர்வரை ரப்பர் பால் எடுக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தில் அதிக அளவில் ரப்பர் விவசாயம் மேற்கொள்ளப்படுவதால், ரப்பர் பால் வெட்டுவதற்கு கேரள மாநிலத்திலிருந்து ஊழியர்கள் தமிழ்நாட்டிற்கு வருவது வழக்கம். ஆனால், தற்போது கரோனா தொற்று காரணமாக இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து இல்லாததால் ஊழியர்கள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரப்பர் தோட்ட விவசாயிகள் வருவாயின்றி தவிக்கின்றனர்.
வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி அடுத்த ஆறு மாத காலம்வரை மட்டுமே ரப்பர் பால் எடுக்கப்படுகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக பால் வெட்ட ஊழியர்கள் வராத நிலையில், பால் எடுப்பதற்கான பருவம் இருந்தும் ஊழியர்கள் பற்றாக்குறையால், பால் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.