தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப்போயுள்ளது - இபிஎஸ்

By

Published : Sep 24, 2021, 11:54 AM IST

palanisamy

'சரியான தலைமை இல்லாமல் நிர்வாகத் திறமையும் இல்லாமல், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லாத ஆட்சி நடைபெற்றுவருகிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப்போயுள்ளது' என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் வாலாஜாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "இந்த உள்ளாட்சித் தேர்தல் ஏற்கனவே நடந்திருக்க வேண்டியது; ஆனால் நடத்தவிடவில்லை.

கடந்த அதிமுக ஆட்சியில் எதையும் செய்யவில்லை எனப் பொய் கூறிவருகிறார்கள். ஆனால் நாம் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளோம். ஓராயிரம் பழனிசாமியை உருவாக்கும் கட்சி அதிமுக. ஆனால், திமுகவில் முதலில் கருணாநிதி இருந்தார், பின்னர் ஸ்டாலின் வந்தார், தற்போது குரங்கு குட்டி வயிற்றில் தாவிக்கொள்வதுபோல உதயநிதி தாவிக்கொண்டுள்ளார்.

திமுக இன்று தேய்ந்துவருகிறது. இன்றைய அமைச்சரவையில் உள்ள எட்டு பேர் முன்னாள் அதிமுகவினர். 15 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்னாள் அதிமுகவினர். திமுகவில் அனைவருக்கும் வயதாகிவிட்டது. நம்மிடம் உள்ளவர்களை வாடகைக்கும், விலைக்கும் வாங்கி வைத்துள்ளார்கள்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொஞ்சம் சுறுசுறுப்பாக நாம் செயல்பட்டிருந்தால் ஆட்சியில் இருந்திருப்போம். ஆனாலும் கோயம்புத்தூர், சேலம் ஆகியவற்றை அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துவிட்டோம்.

நம்மிடம் அப்போது சுணக்கம் இருந்தது, ஆனால் இப்போது வேகம் எடுத்துள்ளது. திமுகவின் காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த முறை அது நடக்காது. எந்தத் தில்லுமுல்லு செய்தாலும் அதை அதிமுகவினர் முறியடிப்போம். அந்த வேலை இங்கு நடக்காது.

ராணிப்பேட்டை மாவட்டத்தை அதிமுக கோட்டையாக மாற்றுவோம். தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய கட்சி அதிமுக. பல்வேறு நிபந்தனைகளைப் போட்டு தற்போது தாலிக்குத் தங்கம் திட்டத்தை திமுக முடக்கப் பார்க்கிறது. அம்மா இருசக்கர வாகன திட்டத்தையும் கைவிட்டுவிட்டார்கள். அம்மா மினி கிளினிக் முடக்கப்பட்டுவருகிறது.

முந்தைய அரசு கொண்டுவந்த திட்டத்தை முடக்குவது, உழவரை வஞ்சிப்பது, இதுதான் திமுக அரசு. நீங்கள் சொன்னதை நம்பி மக்கள் ஏமாந்து நிற்கிறார்கள். 525 வாக்குறுதிகளில் இரண்டு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் கல்வி, வேளாண் புரட்சி செய்துள்ளோம்.

நான்கு மாத காலத்தில் கரோனாவை திமுக கட்டுப்படுத்தவில்லை. ஆனால் அதிமுக சரியான நடவடிக்கை எடுத்ததால் கட்டுப்படுத்தியது. சரியான தலைமை இல்லாமல் நிர்வாகத் திறமையும் இல்லாமல், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லாத ஆட்சி நடைபெற்றுவருகிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப்போயுள்ளது.

வருகிற உள்ளாட்சித் தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரிகலபாடி - வள்ளி, வெட்டவளம் - சந்தி, நெல்வாய் - ரேணுகா என அதிமுகவைச் சேர்ந்த மூன்று ஊராட்சி மன்றத் தலைவர்கள் போட்டியின்றித் தேர்வாகி உள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: 'விடியல் அரசின் வாய்ச்சவடாலால் மாணவன் தற்கொலை'

ABOUT THE AUTHOR

...view details