தமிழ்நாடு

tamil nadu

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் அரசின் முயற்சியில் மீட்பு!

By

Published : May 18, 2022, 6:38 PM IST

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் அரசின் முயற்சியில் மீட்பு

இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சோ்ந்த 4 தமிழ்நாடு மீனவா்கள் மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு விமானத்தில் சென்னை வந்தனா்.

சென்னை: ராமநாதபுரம் மண்டபம் பகுதியைச்சேர்ந்த மீனவா்களான வேலாயுதம், சதீஷ், ராஜகனி, விசாகா் ஆகிய 4 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அவர்களைச் சுற்றி வளைத்து பிடித்து, எல்லைதாண்டி தங்களுடைய கடல் பகுதியில் வந்து மீன்பிடித்ததாகக் கூறி, அவர்களைக் கைது செய்தனர். அத்தோடு படகையும் பறிமுதல் செய்தனா். இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மீனவர்களை விடுவிக்கக்கோரி வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதினார். இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 4 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. அதன் பின்பு இந்த 4 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். தூதரக அலுவலர்கள் அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர்.

ஆனால், இவர்களுக்கு பாஸ்போர்ட், விசா இல்லாததால் எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்க வேண்டியது இருந்தது. மேலும் இவர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடத்திச் சான்றிதழ் வருவதற்கும் தாமதமாகியது. இதனால் இவர்கள் இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் இந்திய தூதரக அலுவலர்கள், இவா்களுக்கு எமா்ஜென்சி சா்டிபிகேட்களை வழங்கி, இலங்கையிலிருந்து 4 மீனவா்களையும் அனுப்பி வைத்தனா். சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாா்பில், தமிழ்நாடு மீன்வளத்துறை அலுவலர்கள் மீனவா்களை வரவேற்று பின்பு அரசு வாகனம் மூலம் ராமநாதபுரம் மண்டபத்தில் உள்ள மீனவா்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: இலங்கை வன்முறை - தமிழக கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணி

ABOUT THE AUTHOR

...view details