தமிழ்நாடு

tamil nadu

“1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற இலக்கு வெகு தொலைவில் இல்லை” - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 2:09 PM IST

CM Stalin Speech: 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற இலக்கை தமிழகம் நெருங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலை திறப்பு நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

mk stalin speech at phoenix kothari jr one footwear manufacturing unit
“1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற இலக்கு வெகு தொலைவில் இல்லை” - மு க ஸ்டாலின் பெருமிதம்

சென்னை:எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலையை, காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.28) திறந்து வைத்தார்.

பின், நிகழ்ச்சியில் பேசிய அவர், “கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் அமைக்கப்பட்டிருக்கின்ற சிப்காட் தொழில் பூங்காவைத் திறந்து வைத்து, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டினேன். சரியாக ஓராண்டு காலத்தில் துவக்க விழாவில் பேசுவதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.

முதலீட்டாளர்களின் முதல் தேர்வு, தமிழ்நாடுதான். மாநிலத்தில் முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதுதான் இதற்கு முக்கியமான காரணம். இங்கே பிசினஸ் செய்வது எவ்வளவு எளிதாக இருக்கிறது என்பதும், முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு எப்படி திகழ்கின்றது என்பதற்கும் இது கண்கூடான சாட்சி.

வளர்ச்சித் திட்டங்கள் என்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தோல் மற்றும் காலணித் துறைகளைப் பொறுத்தவரைக்கும், இந்த அரசுப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது உங்களுக்கே நன்றாக தெரியும்.

கடந்த ஆண்டு தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-ஐ நான் வெளியிட்டேன். இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு, இந்தத் துறையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது, நமக்கெல்லாம் கண்கூடாவேத் தெரிகிறது. இது மாதிரியான வளர்ச்சியைப் பார்க்கும்போது, 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற நம்முடைய இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு வளர்ந்து கொண்டே போகிறது.

இந்தத் துறையில், நம்முடைய தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்த வேண்டும். இன்னும் L360 பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்திட வேண்டும் என்ற உந்துதல் காரணமாக, நமது அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் காலணி உற்பத்திப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிப்காட், சிட்கோ மற்றும் பொது தனியார் கூட்டாண்மை மூலம் 30-50 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்காக்கள் வடிவில் ஆயத்த தொழிற்கூடங்களுடன் புதிய தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான பசுமைத் தொகுப்புகளை அரசு உருவாக்க இருக்கிறது.

தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில், இவ்வளவு சிறப்பான திட்டத்திற்கான திறப்பு விழா நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக, பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இன்றைக்கு முதற்கட்டமாக, 400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், கோத்தாரி குழுமத்தைச் சார்ந்த JR One கோத்தாரி காலணி உற்பத்தித் தொழிற்சாலை துவக்கி வைக்கப்படுகிறது. 2028ஆம் ஆண்டுக்குள் கோத்தாரி ஃபீனிக்ஸ் நிறுவனம், மேலும் 2,440 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 29 ஆயிரத்து 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்று விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறது.

இவை எல்லாம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இதற்கெல்லாம் மணிமகுடமாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடத்த இருக்கிறோம். உங்களைப் போன்ற நிறுவனங்களோடு சேர்ந்துதான் இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம்.

உலகம் முழுக்க இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கிறார்கள். அதற்கு முன்பாகவே, ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம், இந்த அதிநவீன உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. சொல்லப்போனால், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னதாகவே நிறுவனங்களோடு துவக்க விழாவை நான் சமீபத்தில் பல மேற்கொண்டிருக்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க:கோடநாடு கொலை கொள்ளை வழக்கு; முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் விசாரணைக்கு ஆஜர்!

ABOUT THE AUTHOR

...view details