தமிழ்நாடு

tamil nadu

திருக்கடையூர் கடேஸ்வரர் ஆலயத்தில் புகுந்த வெள்ளம்

By

Published : Nov 30, 2021, 2:04 PM IST

சுவாமி சன்னதி

தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயம் சுவாமி சன்னதியில் உட்புகுந்த மழை வெள்ளம் வடியாததால், இரண்டாவது நாளாக மூன்று மின் மோட்டார்கள் மூலம் கோயில் நிர்வாகத்தினர் நீரை வெளியேற்றிவருகின்றனர்.

மயிலாடுதுறை: கடந்த சில நாள்களாக கனமழை கொட்டித் தீர்த்ததில், தரங்கம்பாடி தாலுகாவில் 24 மணி நேரத்தில் நேற்று காலை (நவம்பர் 29) 6 மணிவரை 68 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் தேங்கியது. தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அபிராமி உடனாகிய அமிர்த கடேஸ்வரர் ஆலயத்தில் மழை வெள்ளம் நேற்று உட்புகுந்தது.

இந்நிலையில் கோயில் குளம் நிரம்பியதால் கோயிலிலிருந்து குளத்திற்குச் செல்லும் வடிகால் வழியாக வெள்ளம் சுவாமி சன்னதியில் புகுந்து முழங்கால் அளவிற்குத் தேங்கியது. மேலும் வெள்ளம் கொடிமரம் உள்ள வெளிப்புறத்திலும் சூழ்ந்தது.

கோயிலில் நாள்தோறும் ஆயுள் விருத்தி வேண்டியும் 60 வயதில் சஷ்டியப்தபூர்த்தி விழா, சதாபிஷேகம், கனகாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திருமணங்கள் நடைபெற்றுவரும் நிலையில் திருமணத்திற்கு வந்த பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். திருமணம் செய்துகொண்ட தம்பதியர் சாமியை தரிசனம் செய்வதற்குச் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

மேலும் பக்தர்கள் உடன் வந்த குழந்தைகள் மழை வெள்ளத்தில் விளையாடுகின்றனர். கோயில் நிர்வாகத்தினர் நேற்று காலையிலிருந்து இரண்டு மின் மோட்டார்களைக் கொண்டு குளத்தில் உள்ள நீரைச் சாலையில் உள்ள மழைநீர் வடிகால் மூலமாக வெளியேற்றிவருகின்றனர்.

நீர் வடியாததால் இரண்டாவது நாளாக இன்றும் மூன்று மின் மோட்டார்கள் மூலம் குளத்தில் உள்ள மழை வெள்ளம் வெளியேற்றப்பட்டுவருகிறது. குளத்திலிருந்து நீர் குறைந்தால்தான் கோயிலில் உட்புகுந்த நீர் வடியும் என்பதால் தொடர்ந்து குளத்திலிருந்து நீர் இறைக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:ஈவிகேஎஸ் இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு ரத்து

ABOUT THE AUTHOR

...view details