ETV Bharat / state

மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கஞ்சா பொட்டலத்துடன் மனு அளிக்க வந்த பாஜக நிர்வாகி! - BJP executive petition to mk stalin

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 2:10 PM IST

BJP Executive Petition to M.K.Stalin With Ganja Pocket
BJP Executive Petition to M.K.Stalin With Ganja Pocket

BJP Executive Petition to M.K.Stalin With Ganja Pocket: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி மதுரை விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சா பொட்டலத்துடன் மனு கொடுக்க வந்த பாஜக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி 18வது நாடாளுமன்றத் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் ஓய்வுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது குடும்பத்துடன் 5 நாள்கள் பயணமாக கொடைக்கானல் செல்கிறார். அதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

BJP Executive Petition to M.K.Stalin With Ganja Pocket
முதலமைச்சரிடம் கஞ்சா பொட்டலத்துடன் மனு அளிக்க வந்த பாஜக நிர்வாகி

அப்போது பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டி என்பவர், தமிழ்நாட்டில் பரவி வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி கஞ்சா பொட்டலத்துடன் முதலமைச்சரிடம் மனு அளிப்பதற்காக வந்திருந்தார். அதனைக் கண்ட அங்கிருந்த போலீசார், பாஜக நிர்வாகியைத் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அந்த மனுவில், "தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களும் எளிதில் கிடைத்து வருகிறது. இதனால் இளைஞர்கள் மாணவர்கள், ஏழை மற்றும் கூலி தொழிலாளர்கள், சிறுவர்கள் முதல் என அனைவரும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

இதனால், சமூக விரோத செயல்கள் மற்றும் குற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. ஆகவே தமிழக மக்களின் நலன் கருதி துரித நடவடிக்கை எடுத்து போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

மேலே குறிப்பிட்ட இந்த மனுவுடன், கஞ்சா பொட்டலம் ஒன்றையும் இணைத்திருந்ததால் போலீசார் அதனை கைப்பற்றி மனு கொடுக்க வந்த சங்கர பாண்டியையும் விசாரணைக்காக அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கோவை தொகுதியில் மீண்டும் தேர்தலா? - உயர் நீதிமன்றம் நாளை விசாரணை! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.