மதுரை: மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.206 கோடியில் 8 தளங்களுடன் மிகப் பிரம்மாண்டமாக நூலகம் கட்டப்பட்டது. 'கலைஞர் நூற்றாண்டு நூலகம்' என்ற பெயரில் கட்டப்பட்ட இந்த நூலகத்தை, முன்னாள் முதலமைச்சர் கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளான இன்று மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முன்னதாக நூலகத்தின் நுழைவு வாயில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எ.வ.வேலு, மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, எச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார், எச்.சி.எல் குழுமத் தலைவர் ரோஷினி நாடார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உலகில் உள்ள பெரிய நூலகங்களுக்குச் சவால் விடும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகமானது, 2022-ஆம் ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையால் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், கட்டடப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும், புத்தகம் உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.