ETV Bharat / state

நிலவை நோக்கி பயணிக்கும் சந்திராயன்-3; தமிழக விஞ்ஞானி வீரமுத்துவேலின் தந்தை பெருமிதம்

author img

By

Published : Jul 15, 2023, 4:34 PM IST

சந்திரயான் -3 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், இதன் மூளையாக இருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேலின் தந்தை தனது மகனின் சாதனை குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

விழுப்புரம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்று (ஜூலை 14) நிலவை ஆராயும் பொருட்டு, ரூ.615 கோடி மதிப்பிலான சந்திரயான் 3 விண்கலம் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வெற்றிகரமாக புவி நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாகவும், அதன் இயக்கம் திருப்திகரமானதாக இருப்பதாகவும் இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதற்கான பணியில் அயராது பாடுபட்ட (ISRO) இஸ்ரோவின் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதனைத்தொடர்ந்து, நாட்டின் குடியரசு தலைவர் திரௌபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனிடையே, இஸ்ரோவில் விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல் 'சந்திரயான்-3' திட்ட இயக்குனராக பொறுப்பேற்று அதனை வழிநடத்தி சென்ற விதம் இந்தியா மட்டுமின்றி தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்து உள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த பழனிவேல் - ரமணி தம்பதியினரின் மகன் வீரமுத்துவேல், இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருந்து வருகிறார். மேலும், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான பழனிவேல் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் (SRMU) மத்திய செயல் தலைவராக உள்ளார்.

இந்த நிலையில், கணவன், மனைவி ஆகிய இருவரும் இருவரும் விழுப்புரத்தில் வசித்து வருகின்றனர். இதனிடையே, வீரமுத்துவேல் தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயக்கிய திட்ட இயக்குனர் பொறுப்பை ஏற்று வழி நடத்தியுள்ளார்.

விழுப்புரத்தில் உள்ள வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் இதுகுறித்து பேசியதாவது, 'உலகமே வியந்து உற்றுநோக்கிய சந்திராயன் 3 நேற்றைய தினம் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான முக்கிய திட்ட இயக்குனராக என்னுடைய மகன் நியமிக்கப்பட்டார். கடந்த நான்கு ஆண்டுகளாக இது குறித்த ஆராய்ச்சி செய்து முழுமையான அர்ப்பணிப்புடன் இணைந்து செயல்பட்டு வெற்றிகரமாக சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளனர். இஸ்ரோவின் சார்பில் தனது மகன் தலைமையிலான குழுவினர் இப்பணியில் அற்புதமாக செயல்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக இஸ்ரோவிற்கும் எனது மகனுக்கும் அவருடன் இணைந்து பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார். இதற்கு தமிழகம் மட்டும் பெருமைப்படுவதோடு, அவரது தந்தையாக நானும் பெருமிதம் கொள்கிறேன் என்று மனநிறைவுடன் பேசியுள்ளார்.

விழுப்புரம் ரயில்வே பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்த வீரமுத்துவேல், பிறகு விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில் மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்தார். பின்னர், சென்னை சாய்ராம் கல்லுாரியில், பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். அதன் பின், திருச்சியில் உள்ள ஆர்.இ.சி. அரசு பொறியியல் கல்லுாரியில், எம்.இ., மெக்கானிக்கல் பயின்றார். தொடர்ந்து 2004-ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான 'இஸ்ரோ'-வில் பணிக்கு சேர்ந்தார். இதனிடையே, சென்னை ஐ.ஐ.டி-யிலும் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய பள்ளி படிப்பாக இருக்கட்டும் கல்லூரி படிப்பாக இருக்கட்டும் அனைத்திலும் முதன்மையான மாணவராக வந்து தன்னுடைய முழு திறமையை வெளிக்காட்டியவர் எனது மகன் வீரமுத்துவேல். அவரது திறமையால் உயர்ந்து, தற்போது சந்திராயன்-3 திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். இது போன்று அனைத்து மாணவர்களும் தங்களுடைய கல்வித்திறனை மேம்படுத்தி உயர்கல்வி படித்து பெற்றோர்களுக்கு பெருமையை ஏற்படுத்த வேண்டும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பழனிவேல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Chandrayaan-3: சந்திரயான்-3 திட்டத்தின் மூளையாக உள்ள தமிழர்.. யார் இந்த வீரமுத்துவேல்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.