தமிழ்நாடு

tamil nadu

கரோனா பெருந்தொற்று காரணமாக நிலவுக்கு மனிதரை அனுப்பும் திட்டத்தில் தொய்வு – மயில்சாமி அண்ணாதுரை

By

Published : Sep 23, 2021, 11:02 AM IST

mayilsami annadurai

கரோனா பெருந்தொற்று காரணமாக நிலவுக்கு மனிதரை அனுப்பும் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

மதுரை: மகாத்மா காந்தியடிகள் ஆடைப்புரட்சி நடத்திய நூற்றாண்டை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக ராக்கெட் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், கடந்த 2018-ஆம் ஆண்டு மாதம் ஒருமுறை செயற்கைக்கோள்களை அனுப்பி வந்தோம்.

கரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக செயற்கைக்கோள்களை அனுப்ப இயலவில்லை. அதேபோன்று நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது நிலவு பயணம் முழு வெற்றி அடையாத காரணத்தால், மூன்றாவது நிலவு பயணமும் தள்ளிப் போகிறது. சந்திரயான் 3 செயற்கைகோள் ஓராண்டுக்குள் நிலவுக்கு அனுப்பப்படும். ஆளில்லா விண்கலம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்படும்.

நிலவுக்கு மனிதரை அனுப்பும் திட்டம் நிறைவேற மூன்றாண்டுகள் ஆகும். விமானப் போக்குவரத்து போல விண்வெளிக்கு செல்வதற்கு வாகனங்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

நிலம், நீர், வானில் சென்ற மனிதர்கள் விண்வெளிக்கும் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கென சிறப்பு உடைகள், பயிற்சிகள் இல்லாமல் மிக சாதாரணமாக விண்வெளிக்கு செல்லக்கூடிய நிலை விரைவில் வரும்.

செவ்வாய்க்கிரகத்தில் தாவரங்களை வளர்ப்பதற்கான மூலக்கூறுகள் குறித்து ஆராயப்படும். அங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என மங்கள்யான் செயற்கைக்கோள் மூலம் அறிய முடிகிறது. செவ்வாய்க்கிரகத்தில் கார்பன் டை ஆக்சைடு உள்ளது. கார்பனையும், ஆக்சிஜனையும் தனித்தனியே பிரிக்க முடியும்.

அதேபோல் நீர் இருப்பதற்கான சாத்திய கூறுகளும் அதிகம் உள்ளன. செவ்வாய்க் கிரகத்துக்கு சென்று வருவதற்கு தலா 9 மாதங்கள் ஆகின்றன. செவ்வாய்க் கிரகத்துக்கு செல்லும் பயணங்கள் நிரந்தர பயணமாகவும் மாறலாம். உணவுப் பொருட்கள் எடுத்து செல்லாமல் தாவரங்கள் உருவாக்கி சமைக்க முடியும். கீரைகள், கிழங்குகள் செவ்வாய் கிரகத்திலும் உருவாக்கப்பட்டு உள்ளன.

நிலத்திலும், நீரிலும் வரும் எல்லைப் பிரச்சனைகள் போன்று வானிலும் வரக் கூடாது என உலகில் உள்ள விஞ்ஞானிகள் செயலாற்றி வருகின்றனர். அமைதிக்கான விண்வெளி அமைப்பில் அனைத்து நாடுகளும் உறுப்பினராக உள்ளன.

இந்த அமைப்பு 6 மாதங்களுக்கு ஒரு முறை கூடி ஆலோசனை நடத்தி வருகிறது. ஆயுள்காலம் முடிந்த செயற்கைக்கோள்களை எடுத்துக் கொள்வதற்காக இந்த அமைப்பில் விவாதிப்போம்.

வானில் செயலிழந்த ஏவுகணைகளை பூமிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளும் நடைபெறுகின்றன" என்றார்.

இதையும் படிங்க: ‘தனியார் பங்களிப்பின் மூலம் இஸ்ரோவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்’ - மயில்சாமி அண்ணாதுரை

ABOUT THE AUTHOR

...view details