தமிழ்நாடு

tamil nadu

தமிழ்மொழிக்காக எதையும் செய்யாத திமுக - செல்லூர் ராஜு

By

Published : Jan 25, 2023, 10:25 PM IST

Etv Bharat

தமிழ் மொழிக்காக இதுவரை எதுவும் செய்யாத திமுக, மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும், அக்கட்சியின் ஆட்சியில் நீட் தேர்வினால் தற்கொலை செய்த 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழ்மொழிக்காக எதையும் செய்யாத திமுக - செல்லூர் ராஜு

மதுரை: மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளை முன்னிட்டு(Tamil War Martyrs Memorial Day), மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று (ஜன.25) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’திமுக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் கொண்டாட உள்ளோம் என்று அறிவித்துள்ளார்கள். தமிழ் மொழிக்காக அவர்கள் எதுவும் செய்ததில்லை. போட்டிக்காக கோயம்புத்தூரில் செம்மொழி மாநாடு நடத்தினார்கள். முழுக்க முழுக்க திமுக குடும்பம் தான் அந்த மாநாட்டில் இருந்தது. அந்த மாநாட்டை உலக தமிழ்ச் சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

நீட் தேர்வை (NEET Exam) ரத்து செய்வதற்காக நாங்கள் பல்வேறு வகையில் பாடுபட்டோம். தற்போது முடியாத சூழ்நிலையில் உள்ளோம். திமுகவும் காங்கிரஸும் தான் நீட் தேர்வை கொண்டு வந்தன. உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடியது திமுக கூட்டணி கட்சியில் இருக்கும் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான். வாதாடி அவரே, நீட் தேர்வை நிரந்தரமாக வருவதற்கு காரணமாக இருந்தார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்து ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியது, அதிமுக. அனிதா என்ற மாணவி இறந்ததற்கு வைகோ, திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் போராட்டம் செய்தனர். தற்போது 12 பேர் இந்த திமுக ஆட்சிக் காலத்தில் இறந்துள்ளனர். அவர்களை பற்றி யாராவது பேசுகிறார்களா? வைகோ இது குறித்து பேசுகிறாரா?

நாடாளுமன்றத்தில் 39 பேர் திமுக கூட்டணியில் இருக்கிறார்கள். ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருக்கிறார்கள். நீட் தேர்வுக்காக நாடாளுமன்றத்தை இதுவரை இவர்கள் முடக்கி இருக்கிறார்களா? 48 நாட்கள் காவிரி பிரச்னைக்காக (Cauvery issue) எங்கள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். திமுக இன்று வேஷம் போட்டு நாடகம் ஆடி கொண்டிருக்கிறது. வாரிசு அரசியலை நடத்தி வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தங்களது கொள்கைகளை அடமானம் வைத்திருக்கக்கூடிய கம்யூனிஸ்டுகள், இனிமேல் உணர்ச்சி வந்து நல்லது செய்ய குரல் கொடுக்க வேண்டும் என எண்ணுகிறோம். மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் கூட்டத்திலாவது தமிழ்நாடு மக்களுக்கு நல்லது செய்ய குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

இதையும் படிங்க: அவை நிகழ்வை செல்போனில் வீடியோ எடுத்த விவகாரம்: ஆளுநர் உறவினர் மீது நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details