இறைச்சிக்காக கண்டெய்னரில் 30 எருமைகள் கடத்தல்? - கரூரில் தமிழ் இந்து முன்னணி நிர்வாகிகள் அதிரடி ஆக்ஷன்! கரூர்: கரூர் - திருச்சி நெடுஞ்சாலை அமைந்துள்ள உப்பிடமங்கலம் பிரிவு அருகே 30 எருமை மாடுகள் சட்டவிரோதமாக அடைத்து லாரியில் கொண்டு செல்லப்பட்டது. இதனை தமிழ் இந்து மக்கள் முன்னணியின் நிறுவனர் வி.எஸ்.கே.தமிழ்செல்வன் தலைமையில் நான்கு நிர்வாகிகள் லாரியை சிறைபிடித்து கரூர் வெள்ளியணை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து பேசிய தமிழ்செல்வன், "ஆந்திர மாநிலம் சுலுக்கல்லூர்பேட்டை எனும் இடத்திலிருந்து லாரி மூலம் 30 எருமை மாடுகள் இறைச்சிக்காக கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்வதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து உப்பிடமங்கலம் அருகே லாரியை பிடித்து, வெள்ளியணை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம். இறைச்சிக்காக கொண்டுச் செல்லப்படும் மாடுகளுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதலின் படி, இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் மாடுகள் மருத்துவச் சான்று, குறைந்த மாடுகள் எண்ணிக்கை, போதிய அடிப்படை வசதிகளை கொண்டு லாரியில் கொண்டு செல்ல வேண்டும்.
ஆனால் விதிமுறைகளை பின்பற்றாமல் லாரிகளில் மூலம் மாடுகளை கேரள மாநிலம் வாணியங்குளம் இறைச்சிக்காக கொண்டு செல்கின்றனர். இறைச்சிக்காக எருமைகள் அழிக்கப்படுகின்றன. இதனால் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் ரசாயன உரங்களை தெளிப்பதால் எதிர்கால சந்ததிக்கு உணவு விஷமாகும் அபாயம் ஏற்படக்கூடும்.எனவே இதனை அனைவரும் புரிந்து, நாட்டு இன மாடுகள் அழியாமல் காப்பதற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்" எனக் கூறினார்.
இதனிடையே கரூர் வெள்ளியணை போலீசார் லாரியை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் 30 எருமை மாடுகளை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கபிலை நந்தி கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் ஊடகங்களுக்கு தமிழ் தரக் கட்டுப்பாடு அமைப்பை உருவாக்க வலியுறுத்தல் - தமிழ் எழுச்சி மாநாடு