ETV Bharat / state

தமிழகத்தில் ஊடகங்களுக்கு தமிழ் தரக் கட்டுப்பாடு அமைப்பை உருவாக்க வலியுறுத்தல் - தமிழ் எழுச்சி மாநாடு

author img

By

Published : Mar 26, 2023, 1:43 PM IST

கரூரில் நடைபெற்ற உலகத்தமிழ் காப்பு கூட்டியக்க ஆகமத்தமிழ் எழுச்சி மாநாட்டில், தமிழகத்தில் ஊடகங்களுக்கு ஒரு தரக் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தும் தீர்மானம் உள்ளிட்ட 20 தீர்மானங்களை ஒரு மனதாக நிறைவேற்றினர்.

உலகத் தமிழ் காப்பு கூட்டியக்கம்
தமிழகத்தில் ஊடகங்களுக்கு தமிழ் தரக் கட்டுப்பாடு அமைப்பை உருவாக்க வலியுறுத்தல் - தமிழ் எழுச்சி மாநாடு

உலகத்தமிழ் காப்பு கூட்டியக்க ஆகமத்தமிழ் எழுச்சி மாநாடு

கரூர்: தமிழகத்தில் அனைத்து திருக்கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு விழா நடத்த நடப்பு தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற கரூரில் நடைபெற்ற உலகத் தமிழ் காப்பு கூட்டியக்க ஆகமத்தமிழ் எழுச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கரூர், மதுரை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள வள்ளுவர் அரங்கில் உலகத் தமிழ் காப்பு கூட்டியக்கம் சார்பில் மார்ச் 25( நேற்று) ஆகமத் தமிழ் எழுச்சி மாநாடு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ஸ்ரீ சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன், கருவூர் திருக்குறள் பேரவை மேலை பழனியப்பன், தமிழ் சித்தர் ஆன்மீகப் பேரவை தமிழ் ராஜேந்திரன், கோயம்புத்தூர் தமிழ்ச் சங்கமம் தலைவர் செ. துரைசாமி, தமிழ் காப்பு கூட்டியக்க பொருளாளர் கவிஞர் இல.மணி உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தமிழ்ப் பற்றாளர்கள், கல்லூரி மாணவ- மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பின்வரும் முக்கியத்துவம் வாய்ந்த 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. ’சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து கோயிலிலும் தமிழிலேயே குடமுழுக்கு செய்வதற்கு அரசாணை வெளியிட, தற்போதைய சட்டமன்ற அமர்வு நிறைவு பெறுவதற்கும் முன்னதாகவே சட்ட மசோதாவை தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்வது

2. தமிழகத்தில் கோயில்களை கட்டியவனும் தமிழன், கற்சிலைகளை செய்தவனும் தமிழன், வாயில் காப்பாளனாக இருந்தவனும் தமிழன், ஆனால் இன்று அனைத்து திருக்கோயில்களிலும் வழிபாட்டுச் சடங்காக தமிழ் இல்லை. எனவே, அனைத்து நிலை திருக்கோயிலும் வழிபாட்டுச் சடங்குகள் அனைத்தும் தமிழ் மொழியில் நடைபெற தமிழக அரசு அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

3. தமிழகத்தில் இயங்கி வரும் மாநிலப் பாடத்திட்டம், தேசியப் பாடத்திட்டம், பன்னாட்டு பாடத்திட்டம் மூலம் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழைப் பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும்.

4. கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து நிலை கல்லூரிகளிலும் முதல்கட்டமாக அனைத்து வகுப்புகளிலும் தமிழ் ஒரு பாடமாக வைத்து, தமிழைப் பயிற்று மொழியாக கொண்டு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

5. தமிழக அரசு அலுவலகங்கள் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் பள்ளிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு ஆணைகள், திட்டங்கள் தீர்மானங்கள் செயல்முறைகள் அனைத்தும் தமிழில் வெளியிடப்படுவதை கட்டாயமாக்க வேண்டும்.

6. ஒரு சில மாநிலங்களில் இருப்பது போல் தமிழகத்தில் உள்ள அனைத்து வகை நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என ஒன்றிய, தமிழ்நாடு அரசுகளை கேட்டுக் கொள்கிறோம்.

7. எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாகவும் அலுவலக மொழிகளாகவும் ஒன்றிய அரசை அறிவிக்க வேண்டும்.

8. திருக்குறளை உலகப் பொதுமறையாக அறிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பை(UNESCO) வலியுறுத்த தமிழக அரசு ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

9. திருமணவிழா, புதுமனை புகுவிழா, ஆண்டு விழா, வெள்ளி விழா போன்ற நிகழ்வுகளையும், வாழ்வியல் சடங்குகளையும் தமிழிலேயே செய்ய வேண்டுமென தமிழக மக்களை கேட்டுக் கொள்ளும் தீர்மானம்.

10. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழுக்கு என ஒரு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு இருப்பதைப் போல தமிழகத்திலும் ஊடகங்களுக்கு ஒரு தர கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தும் தீர்மானம் உள்ளிட்ட 20 தீர்மானங்களை ஒரு மனதாக நிறைவேற்றினர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த உலகத் தமிழ் காப்புக்கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ஸ்ரீ சுப்பிரமணியன், '’சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் தமிழில் குடமுழுக்கு விழா நடத்துவது தொடர்பாக 2021 ஆகஸ்ட் 19ஆம் தேதி நீதியரசர்கள் ந.கிருபாகரன் பி.புகழேந்தி ஆகியோர் வழங்கிய தீர்ப்பு கூறினார்கள்.

அதில் தமிழிலும் குடமுழுக்கு விழா நடத்தலாம் என்றும் இது தொடர்பாக ஒரு குழு அமைத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சென்று மக்களிடம் கருத்து கேட்பும் நடத்தலாம் எனவும் வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தமிழில் குடமுழுக்கு விழா நடத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, திருநெல்வேலிக்குச் சென்று மக்கள் கருத்துக் கேட்பு நடத்திய கூட்டத்தின்போது சமஸ்கிருத ஆதரவு கொண்ட சிலர் கூட்டத்தை நடத்த விடாமல் இடையூறு செய்து, கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. எனவே, தமிழில் குடமுழுக்கு விழா நடத்துவதற்கான ஆகம விதிகள், மந்திரங்கள் செய்வதால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்பதை எடுத்துக் கூறும் வகையில் கரூரில் இன்று முதலாவது ஆகமத்தமிழ் எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெற்றது.

இதனை கரூரில் நடத்துவதற்கு முக்கியக் காரணம், கரூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் தமிழிலும் குடமுழுக்கு விழா நடத்தலாம் என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதியரசர் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அமர்வு வழங்கியது. எனவே, தமிழ் வளர்த்த கரூர் மண்ணில் முதலாவது மாநாடு பல்வேறு அமர்வுகளில் நடைபெற்றது. தமிழ் அறிஞர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனர். இதன் அடிப்படையில் முக்கிய தீர்மானங்கள் அரசுக்கு வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் ஏ.கே.ராஜன், ’’தமிழ் மொழி மீது தமிழக மக்களுக்குப் பற்று குறைந்து வருகிறது என்பது வருத்தம் அளிக்கிறது. மற்ற மாநிலத்தவருக்கு தமிழ்மொழி மீது உள்ள பற்று கூட தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு இல்லை. எனவே, தமிழ் மொழிப்பற்றும் பாசமும் தமிழர்கள் மத்தியில் உருவாக்கவே உலக தமிழ் காப்புக் கூட்டு இயக்கம் உருவாக்கப்பட்டு இன்று முதலாவது ஆகமத்தமிழ் எழுச்சி மாநாடு கரூரில் நடைபெற்றது’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "தகுதி நீக்கப்பட்ட எம்.பி" - ராகுல் காந்தியின் ட்விட்டர் பயோ மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.