தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் இனி மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை… அமைச்சர் செந்தில் பாலாஜி

By

Published : Aug 20, 2022, 1:56 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் இனி எப்போதும் மின்தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர்: கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தலைமையில் புத்தகக் கண்காட்சி துவக்க விழா நேற்று இரவு நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு புத்தக திருவிழா முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின்சார வாரியம் நிலுவைத் தொகை வழங்காததால் எக்ஸ்சேஞ்சில் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய மின் தொகுப்பு நிறுத்தப்பட உள்ளது என செய்தி பரவி வருகிறது. மின் தொகுப்பில் இருந்து தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது உண்மைதான். இது சம்பந்தமான விளக்கத்தை கூறுவது எனது கடமையாக கருதுகிறேன்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

ஒவ்வொரு மாநிலங்களும் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் பொழுது அதற்கான தொகை குறித்து உரிய விளக்கங்கள் பெற்று பின்னர் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஜூன் 3ஆம் தேதி ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள Late Payment Scheme திட்டத்தின் கீழ் மின் உற்பத்தியாளர்களுக்கு 48 மாதங்களாக பிரித்து ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என கூறியுள்ளது.

அப்படி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நடப்பாண்டில் மட்டுமல்ல கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்ட நிலுவைத் தொகை ஏறத்தாழ ரூபாய் 17,343 கோடி ஒரு மாதத்திற்கு 368 கோடி தவணை தொகை உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும்.

கடந்த மாதம் வழங்க வேண்டிய தொகை 4ஆம் தேதியே முன்னதாகவே கொடுக்கப்பட்டது. ஒன்றிய அரசு பிராதிப் என்ற இணையதளத்தில் மின் உற்பத்தியாளர்களுக்கு மின்வாரியங்கள் வழங்க வேண்டிய பில் தொகை குறித்து பதிவு செய்யக்கூடிய வசதியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஏற்கனவே பில் தொகை குறித்து கேட்கப்படும் விளக்கங்கள் பெறுவதற்கு வழிவகைகள் செய்யப்படவில்லை.

இதனால் மின் உற்பத்தியாளர்கள் கொடுக்கப்படும் பில் தொகை சரி பார்ப்பதற்கு வழிவகை இல்லாமல் பில் தொகையை கொடுக்க வேண்டியதாக உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை வழங்கிய பின்னரும் இது குறித்த விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்படாமல் உள்ளது.

இதனால் தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை நிலுவையில் இருப்பதாகவும், இதனால் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது. மின்சாரம் நிறுத்தப்பட்டு இருப்பது உண்மைதான். தமிழ்நாடு மின்சார வாரியம் கொடுக்க வேண்டிய பில் தொகையில் 70 கோடி மட்டுமே வழங்கப்பட வேண்டி உள்ளது. இரண்டு நாட்கள் வங்கி விடுமுறை என்பதால் அடுத்த வங்கி வேலை நாளில் உரிய தொகை விடுவிக்கப்படும்.

ஏற்கனவே வழங்கப்பட்ட தொகைகள் இணையத்தில் இருந்து நீக்கப்படாமல் இருந்ததால் ஏற்பட்ட குளறுபடி இதற்கு காரணம். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய நடைமுறையால் மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை குறித்து சரி பார்க்க முடியாத நிலை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளது. செலுத்திய தொகை இணையத்தில் இருப்பதால் 920 கோடி தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்க வேண்டிய தொகை என்பது தவறான கருத்தாகும். செலுத்திய தொகை நீக்கப்படாமல் இருப்பதுதான் உண்மை நிலை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரண்டு நாட்களாக ஏறத்தாழ 16,360 மற்றும் 16,260 மெகாவாட் மின் தேவை இருந்துள்ளது. 343 மில்லியன் அளவிற்கு மின் நுகர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

அதிகம் மின் நுகர்வு இருந்தாலும் கூட, எவ்வித பாதிப்புகளும் இல்லாமல் சீரான மின் விநியோகம் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் மின்சார வாரியத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழ்நாட்டில் நேற்றும் இன்றும் இனி எப்போதும் மின்தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் கட்சி பிரதிநிதிகளோ அல்லது வேறு சமூக பிரதிநிதிகளோ செய்திகள் தெரிவித்தால் மின்சார வாரியத்தின் விளக்கங்கள் கேட்டு செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேவையில்லாமல் பதட்டத்தை உருவாக்க வேண்டாம்.

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின் உற்பத்திக்காக மாதம் ஒன்றுக்கு ரூபாய் 2500 கோடி தேவைப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் மின் தேவைக்கான தொகை வழங்கப்பட்டு வருகிறது. காற்றாலை உற்பத்தியில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் ஒரு யூனிட் மின்சாரம் கூட வீணடிக்கப்படாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே போல சோலார் உற்பத்தி மின்சாரமும் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் 6600 கோடி நிதிச்சுமை ஏற்பட்டது. கடந்த ஓராண்டில் சிக்கன நடவடிக்கைகள் காரணமாக வட்டி சேமிப்பு 2200 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் நிர்வாக திறமையால் நிதியை கையாளுவதற்கு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை குறித்து குளறுபடிகளை தவிர்க்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வலியுறுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

இதையும் படிங்க:தகராறு செய்த இளைஞரை அடித்துக் கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை- கரூர் நீதிமன்றம் தீர்ப்பு!!

ABOUT THE AUTHOR

...view details