தமிழ்நாடு

tamil nadu

சாணத்தை ஒருவர் மீது ஒருவர் வீசியெறியும் விநோத சாணியடி திருவிழா..!

By

Published : Oct 27, 2022, 10:45 PM IST

விநோத சாணியடி திருவிழாவில் பங்கேற்ற இளைஞர்கள்

தாளவாடியில் மக்கள் நோயின்றி வாழ சாணத்தை ஒருவர் மீது ஒருவர் வீசியெறியும் விநோத சாணியடி திருவிழா நடைபெற்றது.

ஈரோடு: தமிழ்நாடு - கர்நாடக எல்லையான தாளவாடி, குமிட்டாபுரத்தில் உள்ள பீரேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் சாணியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். தீபாவளிக்கு அடுத்த 3 வது நாளில் நடைபெறும் இந்த திருவிழாவில் மேல்சட்டை அணியாமல் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.

இதில் கலந்துகொள்ளும் தமிழ்நாடு, கர்நாடகத்தைச் சேர்ந்த பக்தர்கள் சாணத்தை ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டாடும் இந்த விநோத திருவிழா இன்று (அக்.27) துவங்கியது. விழாவுக்குத் தேவையான மாட்டுச்சாணத்தைக் கிராம மக்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பிருந்தே மாட்டுக்கொட்டகையில் சேமிக்கத் துவங்கியுள்ளனர்.

இவ்வாறு சேமித்து வைத்த சாணத்தை இளைஞர்கள் டிராக்டர் மூலம் பீரேஸ்வரர் கோவிலுக்குக் கொண்டு வந்து கொட்டி விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இதற்கிடையே ஊர் பெரியவர்கள், இளைஞர்கள், சிறார்கள் என அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து குமிட்டாபுரம் தெப்பக்குளத்துக்குச் சென்று பீரேஸ்வரர் உற்சவருக்குச் சிறப்புப் பூஜைகள் செய்தனர்.

அதன்பிறகு அலங்காரம் செய்யப்பட்ட உற்சவர் கழுதை மீதேறி ஊர்வலமாகக் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு கொட்டப்பட்ட சாணி குவியல் முன் ஊர் பெரியவர்கள் கற்பூரம் ஏற்றி சிறப்புப் பூஜைகள் செய்து விழாவைத் துவக்கி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து இளைஞர்கள் சாணத்தை உருண்டையாக்கி ஒருவர் மீது ஒருவர் வீசியெறித்து கொண்டாடினர். மக்களைக் கவர்ந்த இந்த விநோத திருவிழாவைப் பெண்கள் பார்த்து ரசித்தனர். விழா நிறைவுக்குப் பின் இளைஞர்கள் பயன்படுத்திய சாணத்தைக் கிராம மக்கள் தங்களது விவசாய நிலத்தில் உரமாக இடுவதின் மூலம் பயிர் செழித்து வளர்ந்து மகசூல் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கிராம மக்கள் நோயின்றி வாழவும், மழை பொழிந்து விவசாயம் செழித்து கிராமம் வளம் பெறவும், வனவிலங்குகளில் இருந்து கால்நடைகளைப் பாதுகாக்கவும் இந்த பாரம்பரிய விழா நடத்தப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

விநோத சாணியடி திருவிழா

இதையும் படிங்க:ஃபயர் கட்டிங்: முடிவெட்டும்போது இளைஞர் தலையில் பற்றி எரிந்த தீ..

ABOUT THE AUTHOR

...view details