தமிழ்நாடு

tamil nadu

ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு சாலை வசதி அமையுங்கள்: உயர் நீதிமன்றம்

By

Published : Dec 30, 2022, 8:43 PM IST

தர்மபுரி மாவட்டத்தில் ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்கான சாலை வசதிக்கு ஆக்கிரமிப்பை அகற்றி, மயானத்திற்கு சாலை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு சாலை வசதி: உயர் நீதிமன்றம்
ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு சாலை வசதி: உயர் நீதிமன்றம்

சென்னை: தர்மபுரியைச் சேர்ந்த கண்மணி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அவர் வசிக்கும் ஜருகு மானியதஹள்ளி கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதாகவும், ஒரு கி.மீ தூரத்தில் தங்கள் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட தனி மயானத்திற்குச் செல்வதற்கான பாதை முறையாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குண்டும் குழியுமாக உள்ள பாதையில் செல்வதால் சில நேரங்களில் பிரேதங்கள் தவறி விழுந்துவிடுவதால், அந்த வழியில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக எடுத்துச்செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது. விவசாய நிலங்கள் பெரும்பாலும் பிற சாதியினருக்கு சொந்தமானது என்பதால், அதில் இறங்கி செல்வதால் அவ்வப்போது சட்ட ஒழுங்கு பிரச்னை எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, முறையான சாலை வசதியை அமைத்துத் தரக்கோரி மே 6ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு, ஆதி திராவிட நலத்துறை, மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்பு ஆகியோருக்கு மனு கொடுத்ததாக மனுவில் கூறியுள்ளார்.

அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்குச் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை வசதி அமைக்க ஆதி திராவிடர் நலத்துறை சிறப்பு தாசில்தாருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க:ரோஜா ஏற்றுமதி சரிவு - கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை

ABOUT THE AUTHOR

...view details