தமிழ்நாடு

tamil nadu

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டிக் கொலை; கோவையில் நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 6:34 PM IST

Old woman murder: கோயம்புத்தூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட மூதாட்டி பாப்பம்மாள்
கொலை செய்யப்பட்ட மூதாட்டி பாப்பம்மாள்

கோயம்புத்தூர்:வீட்டில் தனியாக இருந்த 72 வயது மூதாட்டியை மர்ம நபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் கோவை கருமத்தம் பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தனிப்படை அமைத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே உள்ள தோட்டத்து வீட்டில் பாப்பம்மாள் என்ற 72 வயது மூதாட்டியும், அவரது கணவர் கணபதியப்பன் (76) வசித்து வருகின்றனர். இவர்களுடன் மகள் மற்றும் பேரன், பேத்திகளும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) காலை கணபதியப்பன், அவரது மகள் மற்றும் பேரன் பேத்தியுடன் கணியூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டை பார்க்க சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மூதாட்டி பாப்பம்மாள் மட்டுமே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்துள்ளார். கணபதியப்பன் மற்றும் அவரது மகள், பேரன், பேத்தி ஆகியோர் இரவு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் தனியாக இருந்த பாப்பம்மாள் வாசலில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்துள்ளார். இதனைக் கண்டு கூச்சலிட்ட கணபதியப்பனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

இதையும் படிங்க:வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி தற்கொலை.. ஹெல்மேட் அணியாததால் இளைஞர் பலி உள்ளிட்ட சென்னை க்ரைம் செய்திகள்!

இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டி பாப்பமாளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாப்பம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலைக்கான பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரிக்க 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கருமத்தம்பட்டி பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:கணவனை கொன்றுவிட்டு பலே நாடகம்.. முறையற்ற உறவால் விபரீதம்.. பலே பெண் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details