தமிழ்நாடு

tamil nadu

ஒருத்தன ஏமாத்தனும்னா.. அவனோட ஆசைய தூண்டனும்.. ஆன்லைன் சூதாட்டத்தின் பின்புலம் என்ன?!

By

Published : Jun 29, 2022, 10:27 PM IST

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு மனநல நுட்பங்கள் இருப்பதாக ஹாக்கிங் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருத்தன ஏமாத்தனும் அப்டின்னா.. அவனோட ஆசைய தூண்டனும்.. ஆன்லைன் சூதாட்டத்தின் பின்புலம் பற்றிய சிறப்பு தொகுப்பு!
ஒருத்தன ஏமாத்தனும் அப்டின்னா.. அவனோட ஆசைய தூண்டனும்.. ஆன்லைன் சூதாட்டத்தின் பின்புலம் பற்றிய சிறப்பு தொகுப்பு!

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து, அதனால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் சூதாட்டத்தின் ஆபத்துகள் குறித்த எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் தங்கள் வாழ்க்கையை இழந்து தவிக்கும் வேதனை நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

ஆன்லைன் விளையாட்டுகளை முதன்முதலில் விளையாடும் மக்களின் மனதில் விளையாடும் ஆர்வத்தைத் தூண்டி, அதில் அவர்களைத் தொடர்ந்து ஈடுபட வைப்பதற்காக ஆன்லைன் விளையாட்டை வழங்கும் நிறுவனங்கள் சில தந்திரங்களை கையாளுகின்றன. முக்கியமாக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சைக்காலஜி நிபுணர்களை பணியமர்த்தி, ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுபவர்களின் மனநிலையை அறிந்து, அதற்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மென்பொருள் மூலம் கணினியில் தரவுகளை சேகரிக்கின்றன.

கலர் சைக்காலஜி: இதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவர்களுடன் மென்பொருள்கள் மூலம் கணினி விளையாடுகிறது. இதற்குப் பெரிதும் உதவியாக கூகுளில் பயன்படுத்தும் ‘கீ வேர்டஸ்’ உதவியாக உள்ளது. இந்த வகையான கீ வேர்டஸ், ஒருவர் இப்படித்தான் இருப்பார் என்னும் அனுமானத்தை உண்டாக்குகிறது.

அதேபோல கலர் சைக்காலஜி பயன்படுத்தியும் ஒருவரின் மனநிலையை அறிந்து கொள்கிறார்கள். முதலில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து வெற்றி பெறுவது போல் மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அவர்கள் அந்த விளையாட்டுக்கு அடிமையான நிலைக்கு செல்லும்போது, அவர்கள் தொடர்ந்து தோல்வியை சந்திப்பார்கள்.

விட்டதைப் பிடிக்கும் மனோபாவத்துடன் தொடர்ந்து விளையாடுபவர்கள், தங்கள் பணத்தை இழந்த பின்னர் கடன் வாங்கியும், சொத்துகளை விற்றும் விளையாடுவர். மொத்தமாக இழந்த பின்னர் மன உளைச்சலுக்கு ஆளாகி வேறு வழியின்றி தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர்.

டாப் சைக்காடிஸ்ட்: இதுகுறித்து கோவையைச் சேர்ந்த எத்திக்கல் ஹாக்கிங் நிபுணர் தினேஷ் பராந்தகன் கூறுகையில், “பெரும்பாலும் இந்த ஆன்லைன் விளையாட்டுகளில், விளையாட்டு வீரர்களுக்கு எதிராக கம்ப்யூட்டர் தான் விளையாடுகிறது. இந்த விளையாட்டில் அல்கரிதத்தைப் பயன்படுத்தி விளையாடக் கூடியவர்களின் அடுத்தடுத்த செய்கைகளை கணினியானது கணக்கெடுத்துக் கொள்ளும்.

ஆன்லைன் சூதாட்டத்தின் பின்புலம் பற்றிய சிறப்பு தொகுப்பு

பெரும்பாலானோர் ஒரே மாதிரியான விளையாட்டு முறையை கொண்டிருப்பார்கள். அதனைப் பயன்படுத்தி வெற்றியை கொடுத்த பின் தோற்கடிக்கப்படுவார்கள். பெரும்பாலும் ஆன்லைன் சூதாட்ட கம்பெனிகள் ஆரம்பிக்கும்பொழுது, அவர்கள் நியமிக்கக் கூடிய முதல் நபர் சைக்காடிஸ்ட் எனும் மனநல நிபுணர்கள் தான்.

அந்த மென்பொருளை பயன்படுத்தக் கூடியவர்களுடைய மனதை அறிந்து, அதற்கேற்ப மேலும் மேலும் அந்த மென்பொருளை வடிவமைக்கிறார்கள். அதன் மூலம் மற்றவர்களை ஏமாற்றி ஆன்லைனில் சூதாட்டம் நடக்கிறது. புகழ்பெற்ற நபர்கள், பெரும்பாலும் நடிகர்களை பயன்படுத்தி விளம்பரங்கள் செய்து ஆசையைத் தூண்டி அவர்களை விளையாட வைக்கிறார்கள்.

ஆன்லைன் விளையாட்டுகளை பொழுதுபோக்காக மட்டுமே விளையாட வேண்டும். அதில் பணத்தைப் போட்டு விளையாடக்கூடாது. ப்ளே ஸ்டோரில் இருக்கும் ஆன்லைன் விளையாட்டுகளில் நம்முடைய வங்கிக் கணக்குகளை இணைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் நமது சேமிப்பை இழக்க வேண்டி வரும்.

சமூக வலைதளங்களில் வரக்கூடிய விளம்பரங்களைப் பார்த்து, அதற்குள் சென்று உங்களுடைய வங்கிக் கணக்கு உள்ளிட்ட தனிப்பட விவரங்களை கொடுக்கக்கூடாது. நாம் கொடுக்கும் பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களை பயன்படுத்தி நம்முடைய பெயரில் மற்றவர்கள் லோன் வாங்கக்கூடிய ஆபத்தும் இந்த விளையாட்டுகள் மூலம் ஏற்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பள்ளி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர்... பொதுமக்கள் தர்மஅடி!

ABOUT THE AUTHOR

...view details