தமிழ்நாடு

tamil nadu

Illegal country bomb making in nellai:நெல்லையில் நாட்டு வெடிகுண்டு வெடிக்க செய்த இளைஞர்கள் அதிரடி கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 5:59 PM IST

நெல்லையில் இளைஞர்கள் சிலர், நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து அதனை வெடிக்கச் செய்யும் வீடியோவை அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் பாட்ஷா பட இசை பின்னணியில் நாட்டு வெடிவெண்டு வெடித்த இளைஞர்கள்
நெல்லையில் பாட்ஷா பட இசை பின்னணியில் நாட்டு வெடிவெண்டு வெடித்த இளைஞர்கள்

நெல்லையில் பாட்ஷா பட இசை பின்னணியில் நாட்டு வெடிவெண்டு வெடித்த இளைஞர்கள்

திருநெல்வேலி:நெல்லையை சேர்ந்த சில இளைஞர்களின் சமூக வலைத்தள பக்கங்களில் இரவு நேரம் நாட்டு வெடிகுண்டு வெடிப்பது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த டவுண் போலீசார் விசாரணையில் இறங்கினர். முதல்கட்ட விசாரணையில் நெல்லை டவுன் அரசன் நகரை சேர்ந்த ரஞ்சித் (19) மற்றும் ஆசாத் நகரை சேர்ந்த முகமது தவுபிக்(23) ஆகியோர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வெடிக்க செய்து, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் ரஞ்சித் மற்றும் முகமது தவுபிக் இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் யூடியுப் போன்ற சமூக வலைதளங்களை பார்த்து நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து, இரவு நேரத்தில் ஆள் நடமட்டம் இல்லாத பகுதியான டவுன் அன்னை வேளாங்கண்ணி நகர் தென்புறம் உள்ள வயல் பகுதியில் வெடிக்க செய்து சோதனை பார்த்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

இது மட்டுமின்றி நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்ததோடு, அதனை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்ட வீடியோவில் கையில் நாட்டு வெடிகுண்டு வைத்துக் கொண்டு, சர்வ சாதாரணமாக அதை வயல்வெளியில் தூக்கி எறிந்து வெடிக்கச் செய்துள்ளனர். வெடிகுண்டு விழுந்த இடத்தில் குபுகுபுவென சிறிது நேரம் தீ எரிந்தது. மேலும் அதை வீடியோவாக எடுத்து அந்த வீடியோவின் பின்னணியில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து மிகவும் பிரபலம் அடைந்த திரைப்படமான பாட்ஷா திரைப்படத்தின் பின்னணி இசையை ஒலிக்க செய்துள்ளனர்.

வீடியோவை பார்க்கும் போது சினிமாவில் பார்ப்பதை போன்று துல்லியமாக வெடிகுண்டை வெடிக்க செய்திருப்பது தெரிய வருகிறது. தொடர்ந்து போலீசார் இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் இதே நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இதேபோன்று இளைஞர்கள் சிலர் யூடியுப் சமூக வலைதளத்தை பார்த்து, பெட்ரோல் வெடிகுண்டு தயார் செய்து சுவற்றில் வீசி வெடிக்க செய்தனர்.

இதேபோல் அவர்களும் அதை வீடியோவாக எடுத்து, அதன் பின்னணியில் சாதிய பெருமை பேசும் பாடல்களை ஒலிக்கச் செய்தனர். அதனையடுத்து அச்சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நாங்குநேரியில் சாதிய பிரச்சினையால் பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவன் கடந்த 9ம் தேதி சக மாணவர்களால் வீடு புகுந்து கொடூரமாக தாக்கப்பட்டார்.

மேலும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நெல்லலை மாவட்டத்தில் சாதிய பிரச்சினை உள்பட பல்வேறு காரணங்களுக்காக 12க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில், மாணவர்களிடையே சாதிய பிரச்சினைகள் அவ்வப்போது அரங்கேறும் நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரம் தலை தூக்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது போன்று அடுத்தடுத்த குற்ற சம்பவங்களால் நெல்லை மக்கள் பதட்டமாக காணப்படும் நிலையில், தற்போது மாநகரின் குடியிருப்பு பகுதியின் மிக அருகில் இளைஞர்கள் சர்வசாதாரணமாக நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்க செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற லஞ்சம்.. பத்திரப் பதிவுத்துறை ஊழியர்கள் இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details