தமிழ்நாடு

tamil nadu

ஊழியர்களுக்கு சாதகமாக உத்தரவிடுகிறோம்.. போராட்டத்தை வாபஸ் வாங்க நீதிமன்றம் வலியுறுத்தல்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 5:25 PM IST

TNSTC Strike: போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு நாளை (ஜனவரி 11) முதல் உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும். போராடிய ஊழியர்களின் மீது துறைரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Transport workers strike suspended after madras high court directions
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை:ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகக் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, பாட்டாளி, பி.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கின.

இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்குத் தடை விதிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பால் கிதியோன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், எட்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

மேலும், பொது மக்களின் நடமாட்டத்துக்கும், பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் சுமூகமாக செயல்படுவதைத் தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைச் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என அவரது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசின் நடவடிக்கை என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணப்பட்டது. சுமார் 7 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊழியர்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்துத் தீர்த்து வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்காமல் புதிய கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்க விதிகளின் படி, ஊழியர்கள் போராட்டம் நடத்த அடிப்படை உரிமை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது.

நேற்று (ஜன.09) அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இன்று (ஜன.10) போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என ஊழியர்களிடம் சங்கங்கள் கடுமையாக நடந்து கொள்கின்றன. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தீர்வு காணப்படும் என அரசு உறுதி அளித்த பின்பும் போராட்டத்தைக் கையில் ஊழியர்கள் எடுத்துள்ளனர் என தெரிவித்தார்.

5 சதவிகித அகவிலைப்படி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகள் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால், வேலைக்குத் திரும்ப உத்தரவிட வேண்டும் என அரசு சார்பில் கோரிக்கை விடுவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஊழியர்களின் கோரிக்கைகளைத் தீர்த்து வைக்காமல், அரசு முரண்பாடான வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைப்பதை ஏற்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாததால், போராட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை நீதிமன்றம் உணரமுடிகிறது.

ஆனால், விழாக்காலங்களில் ஏன் போராட்டம் நடத்த வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் கேள்வி? மூத்த குடிமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். ஊழியர்களுக்குச் சாதகமாக உத்தரவு பிறப்பிக்கிறோம், போராட்டத்தைக் கைவிட்டு வேலைக்குச் செல்ல தயாரா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

உரியக் காரணங்களுக்காகப் போராட்டம் நடத்தப்படுவதாக இருந்தாலும், சூழ்நிலை கருதி போராட்டத்தைக் கைவிட வேண்டும். போராட்டத்தை நடத்த ஊழியர்களுக்கு முழு உரிமை உள்ளது. பண்டிகை முடிந்த பின் போராட்டத்தைத் தொடரலாமே? சுமார் 92 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் கேட்டுப் போராடுகின்றனர். அரசு ஏன் கருத்தில் கொள்ளவில்லை.

ஊழியர்கள் பிரச்சனையைத் தீர்த்து வைக்க முடியாமல், அரசு பிடிவாதமாகச் செயல்படுகிறது. ஓய்வு பெற்ற ஊழியர்களின் கணக்கில் உடனடியாக குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபாய் செலுத்த அரசு தயாராக உள்ளதா? கடந்த டிசம்பர் மாதம் ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அரசு கண்மூடித்தனமாக இருந்துள்ளது.

மக்களின் நலனை முக்கியமாகக் கருதி, போராட்ட ஊழியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும். நாளை (ஜன.11) முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வேலைக்குத் திரும்ப வேண்டும். போராடிய ஊழியர்களின் மீது துறைரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் ஜனவரி 19ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்.. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

ABOUT THE AUTHOR

...view details