தமிழ்நாடு

tamil nadu

மத்திய அரசுப் பணிகள் மீது தமிழக இளைஞர்களுக்கு மோகம் குறைவு? - TNSDC புதிய திட்டம்

By

Published : Mar 8, 2023, 8:25 PM IST

Updated : Mar 8, 2023, 10:02 PM IST

மத்திய அரசின் பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் கலந்து கொண்டு பணியிடங்களை பெறும் வகையில், அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இயக்குநர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுப் பணிகள் மீது தமிழக இளைஞர்களின் மோகம் குறைவு? - TNSDC புதிய திட்டம்!
மத்திய அரசுப் பணிகள் மீது தமிழக இளைஞர்களின் மோகம் குறைவு? - TNSDC புதிய திட்டம்!

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதற்காக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் ‘நான் முதல்வன் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த ஆண்டு (2022) முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில், திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இயக்குநர் இன்னசென்ட் திவ்யா மற்றும் சிறப்புத்திட்ட இயக்குனர் சுதாகரன் அளித்த சிறப்பு பேட்டி

இதன் மூலம் பயிற்சி பெற்ற மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் நிலையான வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். ஆனால், மத்திய அரசின் நிறுவனங்களுக்கான பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வினை, தமிழ்நாட்டில் இருந்து எழுதும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே இந்த மத்திய அரசுத் தேர்வினை எழுதி வேலை பெற முடியாது என்ற எண்ணத்தில், இளைஞர்களிடம் ஆர்வம் குறைவாகவே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆகையால், மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குனர் இன்னசென்ட் திவ்யா ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசின் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மத்திய அரசுப் பணிகளுக்குச் செல்ல விரும்பும், கல்லூரியில் படிக்கும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் படித்து முடித்த நிலையில் இருக்கும் மாணவர்களுக்கும் நேரடியாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நான் முதல்வன் திட்டத்தின் போட்டித் தேர்வு பயிற்சி திட்ட இயக்குநர் சுதாகரன் கூறுகையில், “தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மத்திய அரசின் வங்கி, ரயில்வே, வணிக வரித்துறை மற்றும் கஸ்டம்ஸ் போன்றவற்றிற்கானத் தேர்வினை எழுதுவது சிரமம் என கருதுகின்றனர். ஆகையால், அவர்களுக்கு அச்சத்தைப் போக்கி, இந்தத் தேர்வினை எழுதுவதற்குத் தேவையான பயிற்சி அளிக்கப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வாரத்தில் 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். தொடர்ந்து அவர்களுக்கு வாரந்தோறும் நேரடியாக தேர்வு நடத்தப்படும். படித்து முடித்த இளைஞர்களுக்கு நேரடியாக பயிற்சியும், தேர்வும் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பயிற்சி நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும்.

மத்திய அரசின் தேர்வினை தமிழ்நாட்டு இளைஞர்களாலும் எதிர்கொள்ள முடியும் என்பதற்கான தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், மாவட்டத்துக்கு 100 பேரை மத்திய அரசுப் பணிகளில் சேர வைக்கப்படுவார்கள். இதனையடுத்து அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டு, 4 ஆண்டுகள் முடிவில் அனைத்து மத்திய அரசின் நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் பணியில் இருக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க:TNPSC குரூப்-4 தேர்வு முடிவு எப்போது? - ட்விட்டரில் டிரெண்டாகும் #WeWantGroup4Results

Last Updated :Mar 8, 2023, 10:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details