சென்னையில் விலையுயர்ந்த போதைப்பொருட்கள் வெளி மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கோயம்பேடு ரோஹிணி திரையரங்கம் எதிரே போதைப்பொருள் கைமாறுவதை கண்டறிந்து சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இரு நைஜீரியர்களைப் பிடித்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அவர்களிடம் 78 கிராம் கொகைன், 10 கிராம் கஞ்சா சரஸ் மற்றும் 30 அட்டை போதை ஸ்டாம்புகள் இருப்பதை கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சுக்வுகா கேலிஸ்டஸ் மற்றும் காட்ஸ்வின் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் பெங்களூருவில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து போதைப் பொருட்கள் கடத்தி வந்து, சென்னையில் ஒரு நபருக்கு விற்பனை செய்ய வந்திருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், போதைப்பொருட்கள் வாங்க வந்த சென்னையைச் சேர்ந்த ஒருவரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக பெங்களூருவில் இருந்து எத்தனை முறை சென்னைக்கு போதைப் பொருள் கடத்தி வந்து விற்பனை செய்துள்ளனர் எனவும், வேறு எந்த மாநிலத்திற்கு இவர்கள் போதைப் பொருள் கடத்திச் சென்றுள்ளனர் என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் போதைப்பொருள் விற்பனையைத் தடுப்பதற்காக பெருநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, போதைப் பொருள் விற்றதாக பதியப்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்களின் 839 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து போதைப்பொருள் விற்றதாக 39 பேர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: போக்குவரத்து விதி மீறல்: சென்னையில் கடந்த 7 மாதங்களில் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்!