ETV Bharat / state

போக்குவரத்து விதி மீறல்: சென்னையில் கடந்த 7 மாதங்களில் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்!

author img

By

Published : Jul 28, 2023, 3:44 PM IST

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த 7 மாதங்களில் மட்டும் 60 கோடி ரூபாய்க்கு மேல் அபராதத்தொகை வசூல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை புள்ளிவிவரங்களை தெரிவித்துள்ளது.

violation-of-traffic-rules-60-crores-collected-in-last-7-months-in-chennai
போக்குவரத்து விதி மீறியதாக சென்னையில் கடந்த 7 மாதங்களில் 60 கோடி வசூல்

சென்னை: தமிழகத்தின் தலைநகரம் சென்னை என்றாலே அனைவரின் மனதிலும் முதலில் தோன்றுவது டிராஃபிக் தான். இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பது தான் சென்னை போக்குவரத்து காவல்துறையின் பிரதான வேலையாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் வாகன ஓட்டிகளுக்கு மேலும் தலைவலியாக இருந்து வருகிறது.

இந்தப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு வகைகளில் சாலைகள் மாற்றம், புதிய தொழில்நுட்பம் அறிமுகம், ஒரு வழிப் பாதை எனப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் அதிகப்படியான விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கண்டறிந்த போக்குவரத்து போலீசார் தினந்தோறும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

சென்னை போக்குவரத்து காவல்துறை கட்டுப்பாட்டின்கீழ் 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க அந்தந்த போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்டு 55 குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

நாளொன்றுக்கு 40 முதல் 50 வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், சென்னை நகர் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன தணிக்கை செய்யப்பட்டு 7000 வழக்குகள் வரை பதிவு செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் மூலமாக 3ஆயிரம் வழக்குகளும், சட்டம் ஒழுங்கு போலீசாரால் 3 ஆயிரம் வழக்குகளும் பதிவு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை போக்குவரத்து விதிகளை மீறியதாக 60 கோடி ரூபாய்க்கு மேல் அபராதத் தொகை வசூல் செய்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை தரப்பில் அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரங்களைத் தெரிவித்துள்ளது. ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதாக 3.5 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளதாகவும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 19 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19.7 கோடி ரூபாய் அபராதம் செய்துள்ளதாகவும், இவ்வாறாக போக்குவத்து காவல் துறைக்கு 60 கோடி ரூபாய்க்கு மேல் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 149 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ஏழு மாதத்திலேயே 60 கோடி ரூபாய்க்கு அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் சாலை விபத்துகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறையின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.

அதாவது கடந்த 2021ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் சிக்கி 573 பேர் உயிரிழந்த நிலையில் கடந்தாண்டு சற்று குறைந்து 508 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தாண்டில் கடந்த 6 மாதங்களில் மட்டும் சாலை விபத்துகளில் சிக்கி 241 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. கடந்தாண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு சற்று மரணங்கள் குறைந்துள்ளன.

குறிப்பாக போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கையினால் சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்கள் குறைந்திருப்பதாகவும், சீட் பெல்ட், ஸ்டாப் லைன், ஹெல்மெட் அணிந்து செல்வது என பெரும்பாலான பொதுமக்கள் விதிமுறைகளை கடைப்பிடிப்பதாக தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து போலீசார் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதையே பிரதான பணியாக பார்த்து இருப்பதாகவும், பொதுமக்கள் விதிமீறல்களை ஒழுங்குபடுத்தும் நோக்கத்தில் போக்குவரத்து போலீசார் ஈடுபடவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் சாலைகளில் ஏற்படும் பள்ளம் போன்ற பிரச்னைகளால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாவதாகவும், அதைத் தடுக்காமல் அபராதத் தொகையை வசூலிப்பதிலேயே போக்குவரத்து போலீசார் தீவிரம் காட்டி வருவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க : என்எல்சி முற்றுகை போராட்டம்.. அன்புமணி ராமதாஸ் கைது - போலீஸ் வாகனம் மீது கல்வீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.