தமிழ்நாடு

tamil nadu

அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் எடப்பாடி பழனிசாமியை சுற்றி இருக்கிறார்கள் - மருது அழகுராஜ்

By

Published : Jul 4, 2022, 8:41 PM IST

கட்சியை அழிக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஈபிஎஸ்சை சுற்றி இருக்கிறார்கள் - மருது அழகுராஜ்

அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் எடப்பாடி பழனிசாமியை சுற்றி உள்ளதாக நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை: நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சில தினங்களுக்கு முன்பு நமது அம்மா நாளிதழில் என்னுடைய ஆசிரியர் பணியில் இருந்து விலகி விட்டேன். அதிமுகவில் நிலவும் இரட்டைத் தலைமை பிரச்னை வந்ததால் என்னை நானே விலக்கிக் கொண்டேன்.

இருவரும் மனம் இணைந்து கரங்கள் இருக்கமாகக் கொண்டு சென்று இருந்தால், இயக்கம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஈபிஎஸ் பின்னால் இருக்கும் ஒரு சில நபர்களின் தூண்டுதலில் கட்சியின் நிலைமை இப்படி உள்ளது. பொதுக்குழுவிற்கு 23 தீர்மானங்கள் நான்தான் தயார் செய்து இருவருக்கும் அனுப்பி ஒப்புதல் பெற்றேன்.

ஜெயலலிதா இருந்த காலத்தில் பொதுக்குழுவிற்கு ரெஜிஸ்டர் செய்த பிறகு உள்ளே அனுப்புவார்கள். ஆனால் தற்போது எந்த ஒரு முன்பதிவு இல்லாமல் பொதுக்குழுவுக்கு அழைத்து வரப்பட்டவர்கள், பொதுக்குழுவுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் கலந்து கொண்டுள்ளனர். ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மிகவும் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

ஏதோ ஒரு திட்டத்தோடு தான் பொதுக்குழு நடைபெற்றது. திரைக்கதை, வசனம் எழுதி ஒ.பன்னீர்செல்வத்தை அசிங்கப்படுத்தி உள்ளார்கள். பல்வேறு பிரச்னைகள் அன்று நடந்திருக்கிறது. ஆனால் ஒரு வார்த்தை கூட ஏனென்று எடப்பாடி கேட்கவில்லை, கண்டிக்கவில்லை. ஒரு தலைவனை தொண்டர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

மருது அழகுராஜ் செய்தியாளர் சந்திப்பு

அதிமுகவில் இதுதான் அழிக்க முடியாத ஒரு தீர்மானம். நில அபகரிப்பு போல அதிமுகவில் அபகரிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இது ஜனநாயக படுகொலை. அனைத்து கட்சிகளும் அடுத்த தலைமுறைக்கான அரசியலை தொடங்கி விட்டனர். எனவே இரட்டை தலைமையில் அதிமுக பயணம் செய்து, அடுத்த தலைமுறைக்கு கட்சியை கொடுக்க வேண்டும்.

கட்சியை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எடப்பாடி பழனிசாமி சுற்றி இருக்கிறார்கள். பதவி வெறியை கைவிட வேண்டும். கோடநாடு கொலை நடந்த இடத்திற்கு அதிமுக அமைச்சர்கள், தொண்டர்கள் என யாரும் ஏன் செல்லவில்லை. கோடநாடு கொலையில் சம்பந்தப்பட்ட சேலத்தைச் சேர்ந்த இளங்கோவனுக்கு, தனது மாவட்ட செயலாளர் பதவியை எடப்பாடி கொடுத்துள்ளார்.

கண் முன்னே குற்றவாளி இருக்கிறார்கள். தற்போதைய முதலமைச்சர், அவர்களை (கோடநாடு குற்றவாளிகள்) கைது செய்ய வேண்டும். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன். இந்த கொலை வழக்குக்கு தீர்வு வந்தால் அரசியலை மாற்றி போடும்.

தீர்வு வரும் வரை பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும். அப்போது தான் குற்றவாளி இல்லாத பொதுக்குழு நடைபெறும்" என கூறினார்.

இதையும் படிங்க:'அதிமுக இனிமேல் தேராது' - டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details