தமிழ்நாடு

tamil nadu

நாளை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர்.. 10 மசோதாக்களை மாற்றமின்றி நிறைவேற்ற முடிவு.. அரசின் திட்டம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 7:41 PM IST

Updated : Nov 17, 2023, 7:47 PM IST

TN special assembly session: தமிழ்நாடு சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், தமிழக ஆளுநரால் திருப்பி அனுப்பட்ட 10 மசோதக்களை மாற்றமின்றி நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை:சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வந்த நிலையில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஆளுநரின் செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், காலவரையறையின்றி மசோதாக்களைக் கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரியது என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில், நீண்ட நாட்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருந்த மசோதாக்களில் சில விளக்கங்களைக் கேட்டு ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பியுள்ளது.இந்நிலையில், நாளை(நவ.18) சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தில், சில மசோதாக்களைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிகிறது.

மசோதாவை நிறுத்திவைக்க முடியாது:ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களைச் சட்டப்பேரவை கூடி நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கே அனுப்பினால், அவற்றை மீண்டும் ஆளுநரால் நிறுத்திவைக்க முடியாது. ஒரு மசோதாவை ஆளுநரால் திருப்பி அனுப்பப்படும்போது, சட்டப்பேரவை அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆளுநர் குறிப்பிட்ட திருத்தத்தைச் செய்தோ, செய்யாமலோ சட்டப்பேரவை அந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் அந்த சட்ட மசோதாவை நிறுத்திவைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 ஆண்டுகளில் 2013 முதல் கடந்த 10 ஆண்டுகளில், பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்காகத் தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதில், 2013 நவம்பர் 2-ஆம் தேதி அன்று இலங்கை நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தீர்மானமும் 2017- ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிக்காக அவசரச் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. 2022-இல் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது, இதைத் தொடர்ந்து நாளை ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து மீண்டும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு மாதத்திற்குப் பிறகு: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பேரவை கூட்டப்பட வேண்டுமென்ற விதியின் அடிப்படையில், தமிழக சட்டப் பேரவை கடந்த அக்டோபர் 9ஆம் தேதி கூடியது. 3 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டாலும் முடித்து வைக்கப்படாத காரணத்தால், சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை. இதனால், பேரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு அவைத் தலைவரே அனுமதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் யார் பங்கேற்பு?:பாஜகவின் சட்டப் பேரவைக்குழுவின் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறும்போது, "தமிழ்நாடு அரசின் சிறப்பு சட்டப்பேரவையின் கூட்டத் தொடரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொள்வோம். சட்டப் பேரவையின் நடவடிக்கைகளைப் பொறுத்தும், அங்கு கொண்டுவரப்படும் தீர்மானங்களைப் பொறுத்தும் எங்களின் நடவடிக்கை இருக்கும்" எனத் தெரிவித்தார்.

மேலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கலந்துக் கொள்ள உள்ளனர். ஓ.பன்னீர்செல்வமும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

இதையும் படிங்க:தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்: 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை பணிகள் துவங்கியதாக தமிழக அரசு தகவல்

Last Updated :Nov 17, 2023, 7:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details