தமிழ்நாடு

tamil nadu

பட்டாபிராமில் புதிதாக அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு

By

Published : Jun 9, 2023, 5:29 PM IST

பட்டாபிராமில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

shailendrababu
சைலேந்திரபாபு

சென்னை: ஆவடி காவல் ஆணையர் அருண் தலைமையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று (ஜூன் 8) பட்டாபிராமில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை திறந்து வைத்தார். ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்டு இயங்கி வருவது பட்டாபிராம் காவல் நிலையம். இது, கடந்த 1988 ஆண்டு தொடங்கப்பட்டது.

திருநின்றவூர் காவல் நிலையம் நெமிலிச்சேரி முதல் சேக்காடு அண்ணாநகர் வரை மற்றும் பட்டாபிராம் முதல் சோரஞ்சேரி வரை எல்லையாக கொண்டு இயங்கி வருகிறது. ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயில், முத்தாபுதுப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான புகார்களை, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரித்து வந்தனர். ஆண்டுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்ப நல வழக்குகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதிவாகின.

இதனால், ஆவடி மகளிர் போலீசாருக்கு வேலைப்பளு அதிகமாகி, வழக்கை விரைந்து விசாரித்து முடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, உயர் அதிகாரிகளின் தொடர் பரிந்துரையின் பேரில், ஒரு சரகத்துக்கு ஒரு மகளிர் காவல் நிலையம் வேண்டும் என அரசு முடிவெடுத்தது. அதன் பேரில், பட்டாபிராம் காவல் குடியிருப்பில் அமைந்துள்ள பழைய கட்டடத்தை புனரமைத்து, பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையம் உருவாக்க அரசு திட்டமிட்ட நிலையில், அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றது.

ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையம், பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் எல்லையாக பிரியும் நிலையில், திருநின்றவூர் காவல் நிலையம், பட்டாபிராம் காவல் நிலையம் மற்றும் முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க ஏதுவாக அமையும்.

அதன் படி, முதல் பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை, ஆவடி காவல் ஆணையர் அருண் தலைமையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார். இதில் ஆய்வாளர் அறை, சொத்து வைப்பு அறை, நிலை எழுத்தாளர் அறை, உதவி ஆய்வாளர் அறை, கணினி அறை, குழந்தைகளை விசாரணை செய்யும் அறை என அனைத்து விதமான கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. அதேபோல் ஒரு ஆய்வாளர், இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர், முதல்நிலை பெண் தலைமை காவலர் உட்பட 8 போலீசார் பணியாற்ற உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், 'தமிழகத்தில் இது வரை 202 மகளிர் காவல் நிலையங்கள் இருந்தது. தற்போது ஒவ்வொரு உட்கோட்டத்துக்கு ஒரு மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படும் என சட்ட சபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி, தற்போது புதிதாக 20 மகளிர் காவல் நிலையம் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் மகளிர் காவல் நிலையங்களில் 75,000 மனுக்கள் மகளிர் இடமிருந்து பெறப்பட்டது. அவற்றில் பல வழக்குப்பதிவு செய்து தீர்வுகள் காணப்பட்டது. இதனால், பெண்கள் மத்தியில் காவல்துறை நம்பிக்கையும், நன்மதிப்பையும் பெற்றுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 45,000 மனுக்கள் அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன. கிராமங்களிலும், நகரங்களிலும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களைப் பொறுத்தவரை பெண்கள் இடத்தில் அதிகமான நம்பிக்கையை பெற்றுள்ளது. அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு உளவியல் பூர்வமாக பெண்கள் பிரச்னையை அணுகுவதற்காகப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டமாக, பெங்களூரில் உள்ள அகில இந்திய மனநல மருத்துவமனையில் உள்ள நிபுணர்களை வைத்து, நாளை முதல் கட்டமாக பெண்களுக்கான பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும் என்று கவனமாக கேட்டு அவர்கள் பிரச்னையைச் சரி செய்ய 120 மகளிர் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதேபோல், அனைத்தும் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் அதிகாரிகளை பெண்கள் பிரச்னையை கவனமாக கையாள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பயிற்சியின் மூலமாக அறிவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் விசாரணை தரம் உயரும். தற்போது இடம் இல்லாத காரணத்தினால் ஆய்வாளர் குடியிருப்பில் திறக்கப்பட்டுள்ளது. பின்னர், அதற்கான இடம் கண்டுபிடிக்கப்பட்டு அந்த இடத்தில் இந்த காவல் நிலையம் மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டில், ஏற்கனவே காணாமல்போன 10 குழந்தைகளை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் இதுவரை 2,200 சிறுவர்கள் காணாமல் போய் உள்ளனர். இது தொடர்பாக, நீதிமன்றங்களும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் 1,224 காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் 222 மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து ஐந்து நாட்களுக்குள் சிறுவர்களை கண்டுபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெருங்கும் பிப்பர்ஜாய் புயல்; அதி தீவிரப் புயலாக மாறி வடக்கு நோக்கி நகரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

ABOUT THE AUTHOR

...view details