தமிழ்நாடு

tamil nadu

'திமுகவின் ஆட்சிக்காலம் எப்போதும் தமிழாட்சி காலம்' - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

By

Published : Jan 6, 2023, 5:05 PM IST

'தமிழன்' என்ற உணர்வால் தான் பெருமைப்படுவதாகவும்; திமுக ஆட்சி என்றாலே 'தமிழாட்சி' எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

dfvd
df

சென்னை:அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (ஜன.6) நடந்த 'சென்னை இலக்கியத் திருவிழா-2023' (Chennai Literary Festival 2023) தொடங்கி வைத்தும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் 108 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், "முதலில், கேரளாவினுடைய மிக முக்கிய படைப்பாளியாக இருக்கக்கூடிய பால் சக்காரியா(Paul Zacharia)வுக்கு என்னுடைய முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கலையை கலைக்காக மட்டுமல்ல, கலையை மக்களுக்காக இணைத்து பயன்படுத்தும் அவர், நமது அரசினுடைய முன்னெடுப்பிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். அந்த வாழ்த்துகளை நாங்கள் ஊக்கமாக எடுத்துக் கொண்டு நிச்சயமாக, உறுதியாக பணியாற்றுவோம்.

மகிழ்ச்சியான இலக்கியத் திருவிழா:தமிழ்நாட்டினுடைய தலைமகனாக விளங்கிய ஒப்பற்ற தலைவர் பெருந்தகை 'அண்ணா'(C.N.Annadurai)வின் பெயரில் அமைந்துள்ள இந்த நூற்றாண்டு கட்டடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது என்பது மிகமிக மிகமிக பொருத்தமான ஒன்றாக அமைந்திருக்கிறது. இதைவிட வேறு ஒரு பொருத்தமான இடம் நிச்சயமாக அமைய முடியாது. தமிழின் தலைசிறந்த படைப்பாளிகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நாடகத்துறையைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள் பங்குபெறக் கூடிய வகையில் இலக்கியத் திருவிழாவை தொடங்கி வைப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்; பெருமைப்படுகிறேன்.

தமிழனாக இருப்பதில் பெருமை:மாநிலத்தின் 'முதலமைச்சர்' என்ற பெருமையால் மட்டுமல்ல, தமிழை தாய்மொழியாகக் கொண்டிருக்கக்கூடிய 'தமிழன்' என்ற அந்த உரிமையால் நான் பெருமைப்படுகிறேன். திமுகவின் ஆட்சிக்காலம் என்பது எப்போதும் தமிழாட்சி காலம் தான்.தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தின் ஆட்சி என்பது தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சியாக நடந்து வருகிறது.

மெட்ராஸ் to 'தமிழ்நாடு':ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு கொண்ட தமிழருடைய நிலத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டியது. நூற்றாண்டு கனவான செம்மொழி தகுதியை தமிழுக்கு பெற்றுத் தந்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்பதை நாடு மறந்துவிட முடியாது. 'மெட்ராஸ்' என்ற பெயரை 'சென்னை' என்று (Madras was renamed Chennai) மாற்றியது. 'ஸ்ரீ, ஸ்ரீமதி' என்ற சொல்லுக்கு பதிலாக 'திரு, திருமதி' என்ற சொல்லை சட்டபூர்வமாக ஆக்கியது. தலைநகரில் வள்ளுவர் கோட்டமும், கடல் நகரில் 133 அடியில் வள்ளுவர் சிலையும் அமைத்தது. திரும்பிய பக்கம் எல்லாம் திருக்குறளைத் தீட்டியது.

  • 'தமிழ் வாழ்க' என எழுத வைத்தது, சிலம்பின் பெருமையை எடுத்துக் காட்டக்கூடிய வகையிலே பூம்புகார் கோட்டம் அமைத்தது.
  • தமிழில் வழிபடக்கூடிய உரிமையை பெற்றுத் தந்தது
  • ஆட்சிமொழியாய் தமிழை முழுமையாக்கியது
  • தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் அனைத்துப் பாடங்களையும் தமிழில் மொழிபெயர்த்து 1000-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டது
  • தமிழை கணினி மொழி ஆக்கியது
  • தமிழ் பயிற்று மொழிக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இன்று பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை தமிழில் படிக்கலாம்
  • உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது
  • உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியது
  • திராவிடப் பல்கலைக்கழகத்திற்கு நிதி வழங்கியது
  • தமிழ்நெட் இணைய மாநாட்டை 1999-ல் நடத்தியது
  • அனைத்து விழாக்களிலும் 'நீராரும் கடலுடுத்த..' என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாட வேண்டும் என்று உத்தரவிட்டது.
  • சென்னை கடற்கரையில் அவ்வையார், கண்ணகி, கம்பர், வீரமாமுனிவர், ஜி.யு.போப், வ.உ.சி., பாரதியார், பாரதிதாசன் சிலைகளை அமைத்தது.
  • தொல்காப்பியப் பூங்கா அமைத்ததும் திமுக ஆட்சிக்காலத்திலே தான்.

திமுக ஆட்சி 'தமிழாட்சி':பொங்கல் திருநாளுக்கு மறுநாளை 'திருவள்ளுவர் நாள்' ஆக அரசு விடுமுறையுடன் அறிவித்தது திமுக. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதனால்தான், திமுக ஆட்சியை தமிழாட்சி என்று நாமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு முன்னெடுப்புகளை முத்தமிழ் வளர்ச்சிக்காகச் நம்முடைய ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

  • தமிழறிஞர் நூல்கள் நாட்டுடமை
  • எழுத்தாளர்கள் பிறந்தநாளில் கூட்டங்கள்
  • குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு
  • திராவிடக் களஞ்சியம் உருவாக்கம்
  • இதழியலாளர்களுக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது'
  • அமெரிக்காவில் உள்ள ஊஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி உதவி
  • ஜெர்மனியில் உள்ள கோலாம் பல்கலைக்கழக தமிழ்த் துறை தொடர்ந்து இயங்க ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி உதவி
  • டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் தனித் துறையாக தொடங்க 5 கோடி ரூபாய் நிதி உதவி
  • நூலகங்களுக்கு சிற்றிதழ்கள்
  • 'இலக்கியமாமணி விருதுகள்'
  • உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு 'கனவு இல்லம்'
  • திசைதோறும் திராவிடம்
  • குறள் பரிசு
  • முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்
  • தீராக்காதல் திருக்குறள் என ஏராளமான தமிழ்க் காப்புத் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.
    இவை அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல இலக்கியத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழிக்கு பாராட்டுகள்:தனது துறையின் மூலமாக தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆற்றி வரும் அரும்பணி என்பது நிகழ்காலத்தில் மட்டுமல்ல; எதிர்காலத்திலும் நினைத்து நினைத்து மெச்சத்தக்க பணியாக அமைந்திருக்கிறது என்பதை மனதார நான் பாராட்டுகிறேன். அதேபோல், பொது நூலகத்துறையும் மேம்பாடு அடைந்து வருகிறது. தமிழ்நாடு பாடநூல் கழகம் சிறப்பான பணிகளை செய்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆகிய மூன்றும் இணைந்து இலக்கிய விழாவை நடத்தி வருகின்றன.

மாநகரங்களில் 'தமிழ்நாட்டு தமிழ் மாநாடு':நெல்லையில் பொருநை விழா, தஞ்சையில் காவிரி விழா, கோவையில் சிறுவாணி விழா, மதுரையில் வைகை விழா என நடத்தப்பட்டு தலைநகரில் தலைசிறந்த விழாவாக இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தலைசிறந்த படைப்பாளிகள் இங்கு உரையாற்ற இருக்கிறீர்கள். இந்த ஐந்து விழாக்களையும் சேர்த்தால் 'தமிழ்நாட்டு தமிழ் மாநாடு' போல, இதனை சொல்லலாம். இத்தகைய விழாவில், 100 நூல்களை நான் உங்களின் அன்போடு, ஆதரவோடு இங்கே வெளியிட்டு இருக்கிறேன். ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்காக ஒரு விழா என்று இல்லாமல், 100 புத்தகங்களை வெளியிடும் ஒரு விழாவாக இந்த விழா மிகமிக பிரமாண்டமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இணையவழியிலும் தமிழ் படைப்புகள்:தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை, தமிழ்வளர்ச்சித் துறை, செய்தித் துறை, தமிழ் இணைய கல்விக் கழகமாக இருந்தாலும் அனைத்துமே மிகப்பெரிய பதிப்பகங்களுடன் போட்டி போடக் கூடிய வகையில் அறிவுக் கருவூலங்களை வெளியிட்டு இருக்கின்றன. அதிலும் கடந்த ஓராண்டு காலத்தில் ஏராளமான புதிய புதிய புத்தகங்களை நான் பார்க்கிறேன்.

இனமானப் பேராசிரியரைச் சிறப்பிக்கும் வகையிலான தொகுப்பு ஒன்றும் வெளியிடப்பட்டு இருக்கிறது. பத்துப்பாட்டு நூல்கள் வெளியாகி இருக்கின்றன. கலைக்களஞ்சியமானது ஆவணப்பதிப்பாக வெளியாகி இருக்கிறது. மருத்துவ நூல்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழின் பெருமையை, தமிழின் செழுமையை, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை, சமூக வரலாற்றை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழ்நாட்டை இன்றைய தலைமுறைக்கு கற்பிக்கும் புத்தகங்களாக அமைந்துள்ளன. இதனைத் திட்டமிட்டு செயல்படுத்தி, உருவாக்கி, அச்சிட்டு, விற்பனை செய்யும் ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுதல்கள்.

இலக்கியம்-ஒரு இனத்தின் இதயம்:49 ஆண்டுகளுக்கு முன்பு 1974ஆம் ஆண்டு சனவரி 16 ஆம் நாள் அன்று தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் 176 கல்லூரி பாட நூல்களை வெளியிட்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி பேசினார். அந்த நிகழ்ச்சியில், மொழி மானத்தைப் பெற்றாக வேண்டும் என்று குறிப்பிட்டார். இன்றைய தேவை என்பது இதுதான். 'மொழி' என்பது ஒரு இனத்தின் உயிர். இலக்கியம் என்பது ஒரு இனத்தின் இதயம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

மொழியைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த இனம்தான் 'தமிழ் இனம்'. 'திராவிட இயக்கம்' அரசியல் இயக்கமாக இருந்தாலும் மொழி காப்பு இயக்கமாகவே தொடக்கம் முதல் இயங்கி வருகிறது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும், எந்த அரசியல் கட்சியும், இலக்கிய இயக்கமாக இருந்ததில்லை. திமுக தான் அப்படி வளர்ந்தது. தன்னை வார்ப்பித்துக் கொண்டது.

தீனா மூனா கானா:திருக்குறள் முன்னேற்றக் கழகம் என்று திரைப்பாடலில் பாடினார், என்.எஸ்.கலைவாணர். அரசியல் தலைவர்தான் கருணாநிதி . ஆனால், குறளோவியமும், சங்கத்தமிழும் அவர் பெயரை தமிழ் உள்ளவரை சொல்லிக்கொண்டே இருக்கும். எத்தனையோ திட்டங்களைத் தீட்டினாலும், சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரியில் 133 அடியில் அமைந்திருக்கக்கூடிய 'திருவள்ளுவர் சிலை'(Thiruvalluvar statue)யும், காலத்தால் அழியாத கம்பீரமான சின்னங்களாக இன்றைக்கு இருக்கின்றன.

இளம் தலைமுறைக்கு தமிழ் உணர்வுட்டுவோம்:இதை நான் சொல்வதற்குக் காரணம் - மொழியைப் பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது. அறிவால், உணர்வால் வளர்த்தாக வேண்டும். அதற்காகத்தான் இத்தகைய இலக்கிய விழாக்களை நாம் நடத்துகிறோம். இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழ் உணர்வை ஊட்டியாக வேண்டும். தமிழ் இலக்கிய உணர்வை ஊட்டியாக வேண்டும். இலக்கியம் தான் ஒரு மனிதனை பண்படுத்தும்.

மதவாதத்தாலும், சாதியவாதத்தாலும், மனிதர்களுக்குள் பிளவு ஏற்படும்போது, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற திருவள்ளுவரின் ஒரு வரி மனிதனை ஒன்றாக்கும். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரி, மனித சமுதாயத்துக்குள் இருக்கும் அத்தனை வேறுபாடுகளையும் துடைத்தெறியும். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வரி கல்நெஞ்சத்தையும் கரைக்கும்!. 'தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தம் மெய்வருத்தக் கூலி தரும்' என்பதை விட தன்னம்பிக்கை வரி உலகத்தில் உண்டா?

உலகெங்கும் உன்னதமான தமிழ்ப்படைப்புகள்:உலகின் புகழ்பெற்ற புத்தகங்கள் அனைத்தும் இங்கே மொழிபெயர்க்கப்பட்டு விடுகிறது. நம்முடைய தமிழ்ப்படைப்புகள், உலகின் பல மொழிகளுக்கு மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு முதல் உலகப்புத்தகச் சந்தையை இங்கேயே கண்காட்சியாக நாம் நடத்தப் போகிறோம். உன்னதமான தமிழ்ப்படைப்புகள் அனைத்தும் உலகத்தின் பல மொழிகளுக்கு போக இருக்கின்றன.

இந்த நேரத்தில் இத்தகைய படைப்புகள் தமிழர்களால் அதிகம் படிக்கப்பட வேண்டும். அதற்கு இளமைக்காலத்தில் இருந்தே மாணவ சமுதாயத்துக்கு தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராத ஆர்வத்தை உருவாக்க வேண்டும். படைப்பரங்கம், பண்பாட்டு அரங்கம், பயிலரங்கம், குழந்தைகள் இலக்கிய அரங்கம், நிகழ்த்துக் கலைகள் என மிக விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இது போன்ற திருவிழாக்கள் இலக்கிய ஆர்வத்தை உருவாக்க உறுதுணையாக அமையும்.

இலக்கியம் படித்தால்தான், நாம் வாழும் சமுதாயத்தை உணர முடியும். இலக்கியம் என்பது பொழுதுபோக்கு அல்ல. அதுதான் நமது நோக்கும் போக்குமாக மாற வேண்டும். இலக்கியம் என்பது பேரியக்கமாக மாற வேண்டும். புத்தகக் கண்காட்சிகள் மாவட்டந்தோறும் பரவி நடப்பதைபோல, இலக்கிய விழாக்களும் மாவட்டந்தோறும் பரவி நடைபெற வேண்டும்" எனப் பேசினார்.

இதையும் படிங்க:இலங்கையில் 13-வது சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - திருமாவளவன் எம்.பி

ABOUT THE AUTHOR

...view details