தமிழ்நாடு

tamil nadu

நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் எப்போது வெளியாகும்? நீதிமன்றத்தின் தீர்ப்பால் முடிவு கிடைத்ததா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 3:22 PM IST

dhruva natchathiram movie: நடிகர் விக்ரம் நடித்துள்ள "துருவ நட்சத்திரம்" படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரியில் வெளியாகுமா விக்ரமின் துருவ நட்சத்திரம்
பிப்ரவரியில் வெளியாகுமா விக்ரமின் துருவ நட்சத்திரம்

சென்னை:துருவ நட்சத்திரம் படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, வழக்கை 3 வாரத்திற்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இத்திரைப்படம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி வெளியிடப்படுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள விஜய் ராகவேந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

அதில், சிம்புவை நாயகனாக வைத்து "சூப்பர் ஸ்டார்" என்ற படத்தை இயக்குவதற்காக கவுதம் வாசுதேவ் மேனன் தங்களது நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டதாகவும், அதற்கு முன்பணமாக கடந்த 2018ஆம் ஆண்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் அளித்ததாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க இயக்குநர் அமீர் கோரிக்கை!

மேலும் ஒப்பந்தப்படி அந்த பட வேலைகள் நடைபெறாத நிலையில், வாங்கிய முன்பணத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பித் தரவில்லை என மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். எனவே தம்மிடம் பெற்ற தொகையை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என அவர் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பணத்தை திருப்பி அளிக்கும்பட்சத்தில், துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடலாம் என நவம்பர் 22 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கவுதம் வாசுதேவ் மேனனால் இதுவரை பணத்தை திரும்ப செலுத்தாததால், படத்தை வெளியிட முடியவில்லை.

இதை தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று (ஜனவரி 18) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரேவதி மணிகண்டன், துருவ நட்சத்திரம் படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், இந்த வழக்கை மூன்று வாரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என கோரினார். இந்நிலையில், அதனை ஏற்ற நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சாப்பிடும் முன் வழிபட்ட விஷால்… யோகிபாபு கொடுத்த ரியாக்சன் வைரல்!

ABOUT THE AUTHOR

...view details