ETV Bharat / entertainment

ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க இயக்குநர் அமீர் கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 9:20 AM IST

தமிழக அரசுப் பணி இட ஒதுக்கீட்டு உட்பிரிவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சேர்க்கவும், ஜல்லிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு பணி ஒதுக்கிட வேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு இயக்குநர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார்

ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்
ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்

சென்னை: இது தொடர்பாக இயக்குநர் அமீர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “வணக்கம், திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழ்நாட்டின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,

“தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின ஏறு.. கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும் புல்லாளே ஆய மகள்..” என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, மத்திய அரசிடமும், உச்ச நீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழ்நாடு அரசின் அரசுப் பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.

மேலும், இன்று மதுரை அலங்காநல்லூரிலும், கடந்த இரு தினங்களாக அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிலும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

“தமிழர் வீரம் வீணாகாது - தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல” என்பதை உலகிற்குச் சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சரிதா, சாவித்ரி வரிசையில் நிமிஷா சஜயன்.. ஏ.எல்.விஜய் புகழாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.