தமிழ்நாடு

tamil nadu

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்; டி.ஆர்.பாலுவின் ரியாக்‌ஷன்?

By

Published : Jan 13, 2023, 7:42 AM IST

Updated : Jan 13, 2023, 10:50 AM IST

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி.ஆர்.பாலு மற்றும் ஆர்.என்.ரவி
டி.ஆர்.பாலு மற்றும் ஆர்.என்.ரவி

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட உரையில் மாற்றம் செய்யப்பட்டதோடு, சில வார்த்தைகளை தவிர்த்து ஆளுநர் உரையாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதனால் ஆவேசமடைந்த ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் பல்வேறு கட்சித் தலைவர்களும் தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, வில்சன் உள்ளிட்டோர் வியாழன் அன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று காலை 11.20 மணி ஆளுநர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளதாகவும், அங்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்துவிட்டு சனிக்கிழமை மாலை சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய திமுக எம்.பி., டி.ஆர்.பாலுவிடம் ஆளுநரின் டெல்லி பயணத் திட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்தில் எப்படி செயல்பட்டார் என்பதை பற்றி சொல்லி விட்டு வந்து உள்ளோம். அதன் தொடர்ச்சியாக ஆளுநர் டெல்லி செல்லலாம். சமூக நீதி குறித்து 100 ஆண்டு காலமாக செய்து வருகிறோம். சமூக நீதி பற்றி பேசும் போது அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற்றால் சேது சமுத்திர திட்டம் வந்து விடும். திராவிட மாடல் என்பது இலக்கியம், இதிகாசம் ஆகியவற்றில் இருக்கிறது. புரியாதவர்கள் ஏதாவது பேசுவார்கள். அதற்கு பதில் சொல்லி கொண்டு இருக்க முடியாது" என்று கூறினார்.

இதையும் படிங்க: மதுரையில் இனி விமான சேவை 24 மணி நேரமும் இயங்கும்: எப்போதிருந்து தெரியுமா?

Last Updated :Jan 13, 2023, 10:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details