தமிழ்நாடு

tamil nadu

அண்ணா பிறந்தநாள், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 115 கைதிகள் விடுதலை

By

Published : Sep 24, 2022, 1:00 PM IST

அண்ணா பிறந்தநாள், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 115 கைதிகள் விடுதலை

அண்ணா பிறந்தநாள் மற்றும் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 115 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் 700 கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதேபோல் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, நீண்டகாலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்குட்பட்டு விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் மத்திய சிறைகளில் நீண்ட நாட்களாக இருக்கும் கைதிகளில் விடுதலை செய்வதற்கு தகுதியானவர்களை அடையாளம் காண விதிமுறைகள் வெளியிடப்பட்டது.

இதில் 10 ஆண்டுகள் சிறையில் உள்ள கைதிகளில் நன்னடத்தையுடன் இருப்பவர்களை விடுதலை செய்யவும், பாலியல் துன்புறுத்தல், பயங்கரவாத குற்றங்கள் மற்றும் கடத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை பெற தகுதியற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து முன்விடுதலையாகும் கைதிகளின் விவரங்களை சிறைத்துறை டிஜிபி அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதன்படி மாநிலம் முழுவதும் 9 மத்திய சிறைகளில் இருந்து தேர்வான கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இதுவரை 96 கைதிகளும், சுதந்திர தினத்தை முன்னிட்டு 19 கைதிகளும் என மொத்தம் 115 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து விதிகளுக்கு உட்பட்டு விடுதலைக்கு தகுதியான கைதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் படிப்படியாக கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:திருட்டு பைக்கை சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்திய தலைமைக்காவலர்

ABOUT THE AUTHOR

...view details