தமிழ்நாடு

tamil nadu

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவது தொடர்பான வழக்கு: கோயில் நிலத்தை மதிப்பீடு செய்ய உத்தரவு

By

Published : Apr 9, 2021, 12:37 AM IST

கள்ளக்குறிச்சி: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக, குத்தகைக்கு எடுக்க உள்ள கோயில் நிலத்தை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்களை பரிந்துரைக்க பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவது தொடர்பான வழக்கு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவது தொடர்பான வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 34 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக 2020 நவம்பர் 28ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிலத்தை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்கும்படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் சஞ்சிவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (ஏப்ரல்.8) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழுவின் அறிக்கையை தாக்கல் செய்த அரசு தலைமை வழக்கறிஞர் கோயில் நிலத்துக்கு அருகில் உள்ள நிலத்தின் விற்பனை விலை அடிப்படையில் சென்டுக்கு 36 ஆயிரத்து 850 ரூபாய் வீதம் 34 ஏக்கருக்கு 12 கோடியே 82 லட்சத்து 46 ஆயிரத்து 476 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு, அதில் 0.12 சதவீதமான 1.60 லட்சம் ரூபாய் மாத வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த கணக்கீட்டுக்கு ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், அப்பகுதியில் கடைசியாக ஒரு செண்ட் நிலம் 3.50 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளதால், 34 ஏக்கர் கோயில் நிலத்துக்கு 133 கோடி ரூபாய் சந்தை விலை எனவும், அதில் 0.2 சதவீதமான 66 லட்சம் ரூபாயை மாத வாடகையாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நீதிமன்றம் நியமித்த குழுவும், மனுதாரரும் அளித்த கணக்கீட்டில் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளதால், கோயில் நிலத்தை மதிப்பீடு செய்ய சுதந்திரமான அலுவலர்களை நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், பாரத ஸ்டேட் வங்கி மதிப்பீட்டாளர்கள் மூன்று பேரின் பெயர்களை பரிந்துரைக்க வங்கி துணை பொது மேலாளருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: ஊழல் என்னும் புற்றுநோய் நம்மைக் கொல்கிறது - சார் பதிவாளர் இடமாற்றம் தொடர்பாக நீதிமன்றம் கருத்து

ABOUT THE AUTHOR

...view details