தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவில் இணையும் அதிமுக பிரமுகர்? கோவை ட்விஸ்ட்!

ஓபிஎஸ் அணியிலிருந்து விலகிய கோவை செல்வராஜ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை (டிச.7) காலை திமுகவில் இணைகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

திமுகவில் இணையும் அதிமுக முக்கிய பிரமுகர்
திமுகவில் இணையும் அதிமுக முக்கிய பிரமுகர்

By

Published : Dec 6, 2022, 1:23 PM IST

சென்னை: எம்ஜிஆர் மீது கொண்ட ஈர்ப்பால் 1980-களில் அரசியலுக்கு வந்தவர் கோவை செல்வராஜ். கொங்கு பகுதி என்பதால் எம்ஜிஆரிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 1984 கால கட்டங்களில் எம்ஜிஆர் உடனான கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

ஈபிஎஸ் அணியில் பயணம்:

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெற்றி பெற்றிருந்தாலும் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராகவே செயல்பட்டார். 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் நிரந்தரமாக அதிமுகவில் இணைந்தார். தொடர்ச்சியாக ஜெயலலிதாவால் கட்சியில் பல பொறுப்புகள் வகித்து வந்தார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் செயல்பட்டு வந்தன. இதில் இவர் கோவை பகுதி என்பதால் ஈபிஎஸ் அணியில் பயணம் செய்தார். அப்போது இவருக்கு அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி

ஓபிஎஸ் அணியில்பயணம்:

இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஏற்பட்டு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியாக பிரிந்தது. அப்பொழுது, ஈபிஎஸ் ஆதரவாளராக அறியப்பட்ட கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இணைந்து செயல்பட்டது, ஈபிஎஸ் தரப்பினர் இடையே வியப்பை ஏற்படுத்தியது. இதற்கு காரணம், 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் தனக்கு தொகுதி ஒதுக்குமாறு விருப்பமான தெரிவித்திருக்கிறார் கோவை செல்வராஜ். இதனை ஏற்க மறுத்த ஈபிஎஸ், தொகுதி ஒதுக்கவில்லை. இதனால் தான் ஓபிஎஸ் அணியில் கோவை செல்வராஜ் இணைந்ததாக தெரிகிறது.

ஓபிஎஸ் மீது அதிருப்தி:

தொடர்ந்து ஈபிஎஸ் தரப்பினரை மிகவும் கடுமையாக கோவை செல்வராஜ் விமர்சனம் செய்து வந்தார். ஓபிஎஸ் அணியின் பேசும் நபர்களில் முக்கியமாக திகழ்ந்த கோவை செல்வராஜுக்கு, கோவை மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியகுளத்தில் தனது முன்னிலையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளை ஓபிஎஸ் அணியில் இணைத்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஓபிஎஸ் அணியில் இருந்து கோவை செல்வராஜ் விலகி உள்ளார் என தெரிகிறது.

ஓ.பன்னீர் செல்வம்

ஓபிஎஸ் மீதான அதிருப்திக்கு காரணம்:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை வெளியானது. இந்த அறிக்கை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ், ஜெயலலிதாவின் மரணத்திற்கு அப்போது இருந்த அமைச்சர்கள் தான் காரணம். ஜெயலலிதாவிற்கு சர்க்கரை நோய் இருந்தும் அவருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அப்போது இருந்த அமைச்சர்கள் தங்களது பதவியை காப்பாற்றி கொள்வதற்காக கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்ல யாரும் முயற்சி செய்யவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த பொழுது பொறுப்பு முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அப்படி இருக்கையில் கோவை செல்வராஜ் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டை வைத்த போது அது ஓபிஎஸ்க்கும் பொருந்துமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பொறுப்பு முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசனைகளை அப்போது இருந்த அமைச்சர்கள் கேட்க மறுத்து விட்டனர் என கூறினார். இதனை தொடர்ந்து பல்வேறு செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த விவகாரத்தை பேசி வந்தார்.

கோவை செல்வராஜ்

இதற்கு ஓ.பன்னீர்செல்வம், கோவை செல்வராஜை அழைத்து ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து பொதுவெளியில் இனி பேச வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவுரையை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கோவை செல்வராஜ் ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்துள்ளார். அவருக்கு கொடுக்கப்பட்ட கோவை மாவட்ட செயலாளர் பொறுப்பில் எந்த பணியும் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இதை அறிந்த ஓபிஎஸ் அணியினர் கோவை மாவட்டத்தை நான்கு மாவட்டமாக பிரிப்பதாக கூறி கோவை செல்வராஜை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்தனர்.

செந்தில் பாலாஜி

திமுகவில் இணைய காரணம்:

இதனால் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகிய கோவை செல்வராஜ், ஈபிஎஸ் அணிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தெரிகிறது. அதிமுகவிலிருந்து விலகிய போது தங்களின் சுயநலத்திற்காக ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் சண்டை போட்டு கொண்டிருக்கின்றனர். இதனால் தான் அதிமுகவிலிருந்து விலகுகிறேன் என கூறினார். கோவை செல்வராஜ் அதிருப்தியில் இருப்பதை அறிந்த திமுகவின் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, இவரை திமுகவில் இணைய வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கோவை செல்வராஜ் திமுகவில் இணைவதற்கு ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:தென்காசிக்கு ரயில் பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details