சென்னை: கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர், அமைச்சர் பொன்முடி. இவர் வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறியது மட்டுமல்லாமல், இருவரையும் விடுவித்து 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2016ஆம் ஆண்டு மேல் முறையீட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடைபெற்று வந்தது.
இந்த விசாரணையில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்பட லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட புலன் விசாரணையில் சேகரித்த ஆதாரங்களையும், 39 சாட்சிகளை விசாரித்ததாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளதாகவும், பொன்முடியின் மனைவிக்கு, சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், அவர் தனியாக வர்த்தகம் செய்ததாகவும் கூறிய அவர், இவற்றை புலன விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
மேலும், குறிப்பிட்ட காலகட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் அவர் வாதிட்டார். இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 19 அன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மனைவி பெயரில் தவறான சொத்து சேர்த்தது நிரூபணமாகிறது என தெரிவித்தார். அது மட்டுமல்லாமல், வருமான வரி ஆவணங்கள் நிரூபிக்கவில்லை என வழக்கு ரத்து செய்யப்பட்டதை ஏற்க முடியாது என தெரிவித்த அவர், அவ்வாறு விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் எனவும், ஆகையால் விழுப்புரம் நீதிமன்றம் தவறான தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் நீதிபதி கூறினார்.
மேலும், கீழமை நீதிமன்றம் வங்கிக் கணக்கு ஆவணங்களை முழுமையாகப் பார்க்கத் தவறிவிட்டது என சுட்டிக் காட்டிய நீதிபதி ஜெயச்சந்திரன், 64 சதவிகிதம் சொத்து சேர்த்திருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதனால், பொன்முடி வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என அதிரடியாக தீர்ப்பளித்தார்.
இதன்படி டிசம்பர் 21ஆம் தேதியான இன்று, பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரடியாகவோ அல்லது காணொலி காட்சி மூலமாகவோ நேரில் ஆஜராக வேண்டும் எனவும், அப்போது தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனத் தீர்ப்பில் கூறி இருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் நீதிமன்றத்திற்கு அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது, அவரது காரில் தேசியக்கொடி அகற்றப்பட்டிருந்தது. இதனை ஒட்டி, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கில் தண்டனை விவரங்களை நீதிபதி ஜெயச்சந்திரன் வாசிக்கத் தொடங்கும் முன்பாக, அமைச்சர் பொன்முடி கருத்தை தெரிவிக்க உயர் நீதிமன்றம் வாய்ப்பு வழங்கியது.
அதனை எழுத்துப்பூர்வமாகவோ அல்லது வாய்மொழியாகவோ தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. அப்போது, அமைச்சரின் மருத்துவ ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு, தண்டனைக்கு முன் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என நீதிபதியிடம் அமைச்சர் பொன்முடி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன்படி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா ரூபாய் 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும். பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் ஜனவரி 22ஆம் தேதிக்குள் கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் இல்லை என்றால் கிழமை நீதிமன்றம் கைது நடவடிக்கை மேற் கொள்ளலாம் என நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சொத்துகுவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு.. எதிரான தீர்ப்பு வந்தால் அமைச்சர் பொன்முடியின் நிலை?