ETV Bharat / state

சொத்துகுவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு.. எதிரான தீர்ப்பு வந்தால் அமைச்சர் பொன்முடியின் நிலை?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 6:47 PM IST

Updated : Dec 21, 2023, 11:45 AM IST

If MHC convicts Minister Ponmudi in Disproportionate assets case possibility that he will lose his post
அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு

Minister Ponmudi case: சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுதலை செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் நாளை தண்டனை விவரத்தை அறிவிக்கப்பட உள்ளது. இதில் தண்டனை, அபராதம் விதிக்கப்படும் பட்சத்தில் அவரின் பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை: கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அன்றைய திமுக ஆட்சி கால கட்டத்தில் கனிமவளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கினை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் கடந்த 2016ஆம் ஆண்டு விடுவித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் 2017ஆம் ஆண்டு மேல்முறையீடு வழக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்பட லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட புலன் விசாரணையில் சேகரித்த ஆதாரங்களையும் சாட்சிகளையும் விசாரித்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமைச்சர் பொன்முடி, மனைவி விசாலாட்சி வருமானத்தை பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்பு துறையினர் கணக்கெடுத்துள்ளதாக கூறினார். பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், தனியாக வர்த்தகம் செய்ததாகவும் கூறிய அவர் இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை எனவும் அதை மேற்கோள் காட்டினார்.

விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை மேலோட்டமாக விசாரித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி அளவுக்கு அதாவது 64.90 % அளவிற்கு அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் சொத்து குவித்துள்ளதாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சுமத்தி உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபனம் ஆகியுள்ளன.

அமைச்சர் பொன்முடிக்கு கணக்கில் காட்டப்படாத வகையில் வந்த வருமானம் மூலம் அவரது மனைவி விசாலாட்சிக்கு பல்வேறு சொத்துக்களை வாங்கி இருப்பதாகவும் இந்த மூலதன வருமானத்தை சிறப்பு நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை எனவும், எனவே இந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என்பதால் தண்டனை விவரங்கள் நாளை காலை 10:30 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது காணொலி காட்சி வாயிலாகவோ ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8(1)ன் படி ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி தகுதி இழப்பிற்கு ஆளாக நேரிடும். மேலும், ஊழல் தடுப்பு சட்டத்திற்கு தண்டனை விதிக்கப்பட்டால், அபராதம் என்பது ஒரு ரூபாய் என்றும் விதிக்கப்பட்டாலும் கூட தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். மேலும், இந்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டால் கூட அதன் பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

தற்போது ஊழல் தடுப்பு சட்டத்திற்கு பொன்முடி குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அவருடைய சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவியை பொன்முடி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 1996 - 2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 1.36 கோடி அளவிற்கு சொத்து குவித்ததாக மற்றொரு வழக்கிற்காகவும் வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் அவரை விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பையும் மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரிக்க உள்ளது. இந்த வழக்கும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2024ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.. எந்தெந்த தேர்வு எப்போது நடக்கும் முழு விவரங்கள் உள்ளே!

Last Updated :Dec 21, 2023, 11:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.