சென்னை:சென்னை பாரி முனையில் உள்ள சென்னை பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் மருத்துவ கட்டமைப்பு மற்றும் மருத்துவ உபகரணங்களை இன்று (ஜன.2) பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் மிகப் பழமையான மருத்துவ கட்டமைப்புகளில் ஒன்று. இங்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து பயன் பெற்று வருகின்றனர். தெற்கு ஆசியாவிலேயே புற நோயாளிகள் அதிகளவில் பயன்படுத்தும் வகையில், இந்த மருத்துவமனை பயன்பாட்டில் இருந்து வருகிறது.
மேலும், ரூ.25 லட்சத்து 31 ஆயிரம் செலவில் இன்று பல் மருத்துவக் கல்லூரியில் புதிய பல் மருத்துவப் பிரிவு, உணவருந்தும் கூடம், எல்இடி திரையுடன் கூடிய புனரமைக்கப்பட்ட கலையரங்கம், மாணவர்கள் படிப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் ஏதுவாக பொது அறை, புதிய சலவையகம், பாதுகாவலர் அறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு உள்ளிட்ட புதிய வசதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
சென்னை பல் மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லூரி, சிதம்பரம் பல் மருத்துவக் கல்லூரி என தமிழகத்தில் மூன்று அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. கடந்த பட்ஜெட்டில் இங்கு பயிலும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று, ரூ.64 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் 620 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கூடிய விடுதி ஒன்று, இந்த ஜனவரி மாத இறுதியில் கட்டத் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.
அதேபோல, சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு என ரூ.135 கோடி செலவில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கும் விடுதியும், இதே வளாகத்திலேயே கட்டப்பட உள்ளது. முதுநிலை மருத்துவ மாணவர்கள், பல் மருத்துவ மாணவர்களுக்கான ஒரு விடுதி என ரூ.200 கோடி செலவில் 2 மாணவர்கள் தங்கும் விடுதிகள் இந்த மாத இறுதியில் தமிழக முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியதில் இருந்து 18 மாத காலத்திற்குள் இவை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வரும்.
இதையும் படிங்க:சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்புக்கு பணிச்சுமை காரணமல்ல - டீன் தேரணி ராஜன் விளக்கம்..