தமிழ்நாடு

tamil nadu

அஜித்திற்காக துணிவு திரைப்படத்தில் பாடல் எழுதி உள்ளேன் - பாடலாசிரியர் விவேகா

By

Published : Nov 22, 2022, 9:33 AM IST

பட்டத்து அரசன்

நடிகர் அஜித்திற்காக துணிவு படத்தில் பாடல் எழுதியிருப்பதாக பாடலாசிரியர் விவேகா தெரிவித்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில், நடிகர்கள் ராஜ்கிரண் மற்றும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள "பட்டத்து அரசன்" திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாடலாசிரியர் விவேகா பேசியபோது,”இசையமைப்பாளர் ஜிப்ரானுடன் எனக்கு நல்ல நட்புணர்வு இருக்கிறது. அவருடன் நான் எழுதிய தாரமே தாரமே பாடல் 100 மில்லியன்களுக்கு மேல் தாண்டி வெற்றிபெற்றது. அதே போல் துணிவு திரைப்படத்திலும் அஜித்திற்காக பாடல் எழுதி உள்ளேன்” என்றார்.

நிகழ்ச்சியில் பேசத் தொடங்கும்போது தொகுப்பாளினி பெயர் அர்ச்சனாவா? அஞ்சனவா? என்று குழம்பி போய் ஆரம்பித்த நடிகர் சிங்கம்புலி ,”நானும் விமலும் பேசும் நேரத்தின் மிகுதியாக சற்குணம் அவர்களை பற்றியே பேசுவோம். கபடியை தவிர வேறு எந்த விளையாட்டை விளையாடினாலும் செலவு ஆகும். கபடி விளையாட ஒரு கோடு போட்டால் போதும்.

ராஜ்கிரண் உட்கார்ந்து யோசித்துக் கொண்டு இருப்பார். எப்போது பேசினாலும் கோபத்தில் இருப்பது போலவே இருப்பார், காரணம் அந்த கதாபாத்திரத்தில் ஊறி இருப்பார். தூரத்தில் இருந்து பார்க்கும்போது நாங்கள் படத்தை பற்றியே பேசுவோம் என்று நினைப்பார்கள். ஆனால் நாங்கள் என்ன சாப்பிட்டோம் என்று பேசிக் கொண்டிருப்போம். சோறு தான் நமக்கு முக்கியம். வீட்டோட மாப்பிள்ளை நிலைமை எல்லாருக்கும் தெரியும். தஞ்சாவூரை வைத்து படம் பண்ணினாலே போதும், லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கும்.

நானும் இயக்குனர் பாலாவும் ஒரு நடிகரோட பேசியபோது, அந்த பெரிய நடிகர் நான் ஏன் மொட்டை அடிக்கணும் என்றார். ஆனால் நாங்கள் மறைந்த நடிகர் முரளியிடம் கேட்டபோது உடனே எப்போது மொட்டை அடிக்கணும் என்று கேட்டார். ரெட் படம் முடித்த பிறகு 50 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து அடுத்த படத்தையும் அஜித் வைத்து இயக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம், ஆனால் அது எப்படியோ கை விடப்பட்டது. எல்லாரும் ரம்பா தொடையை பார்த்து சினிமாவிற்கு வந்து இருப்பார்கள், அதேபோல் நானும் ராஜ்கிரண் தொடையை பார்த்து வந்தோம்” என்றார்.

நடிகர் பால சரவணன் பேசியபோது,”தவமாய் தவமிருந்து படத்தின் பெரிய ரசிகர் நான், இந்த படத்தை பார்க்கும்போது என் அப்பாதான் ஞாபகத்திற்கு வந்தார்கள். தவமாய் தவமிருந்து படத்தை என் அப்பா அம்மாவை கூட்டி பார்க்க வைத்தால், அவர்கள் எங்கள் அப்பா ஞாபகம் வந்தது என்று அழுதார்கள், ராஜ்கிரண் நடித்த முத்தையா கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வரவில்லை.தஞ்சாவூரில் பறந்த காடை, புறாக்கள் என எதையுமே விடவில்லை. அனைத்தையும் சாப்பிட்டோம்.

அதர்வா எந்த விசயத்தை பற்றி பேசினாலும் பேசுவார், நிறைய விசயம் தெரிந்த ஆள், அவர் ஒரு நடமாடும் கூகுள் மேப். எலான் மஸ்க்கிற்கே டஃப் கொடுப்பார்” என்றார்.

தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசியபோது,”கரோனா காலத்தில் இறந்தவர்களின் உடல் கிடைப்பதே கடினமாக இருந்தது, அதேபோல் ஒரு 500க்கும் மேற்பட்டோருக்கு அப்படி உதவி செய்து உடலை வாங்கி கொடுத்தேன். அந்த காலக்கட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை விடவேமாட்டேன். ஒரு 30 முறையாவது அழைத்திருப்பேன். அவரும் வேண்டிய வசதிகளை செய்து நல்ல உதவி செய்தார்.

நானும் சிங்கம்புலியும் இணைந்து படம் எடுக்க வேண்டும், அதில் நான் நாயகனாகவும், சிங்கம்புலி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. விசித்திரன் திரைப்படத்திற்கு பல்வேறு திரை துறையினரும் பாராட்டினார்கள். தெலுங்கு, இந்தி என ஆனால் தமிழில் இதுவரை யாரும் பாராட்டியது இல்லை. தற்போது மகேஷ் பாபுவுடன் படம் செய்து கொண்டிருக்கிறேன். ரஜினிகாந்துடன் படம் நடித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

நடிகர் அதர்வா பேசியபோது,”ஒரு கிராமம் சம்பந்தப்பட்ட கதை பண்ணவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. நடிகர் சிங்கம்புலியுடன் பேச போகும்போதெல்லாம் எப்போதும் சாப்பிட்டு கொண்டே இருப்பார்” என்றார்.

இயக்குனர் சற்குணம் பேசியபோது,”நாங்கள் ஒரு இடத்தில் நின்று கபடி விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரே குடும்பத்தில் இருந்து அப்பா, மகன், தாத்தா என்று அனைவரும் கபடி விளையாட வந்தார்கள். அப்போதே முடிவு செய்தேன் அந்த நிகழ்வில் கதை உள்ளது என்று. அதேபோல் கதாபாத்திரத்தையும் தேர்வு செய்தேன். இவர்கள் தான் நடிக்க வேண்டும் என்று.

தஞ்சையில் ஆலக்குடியை சார்ந்த மிகப்பெரிய வீரரான பொத்தாரி என்பவரின் பெயரை ராஜ்கிரண் அவர்களின் கதாபாத்திரத்திற்கு வைத்தோம். பொத்தாரி அவர்களின் புகைப்படம் ராஜ்கிரண் அவர்களின் ஒத்த உருவத்தை கொண்டிருந்தது. ராஜ்கிரண் அவர்கள் இந்த திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நான் எந்த படத்தையும் பார்த்து காப்பி அடிப்பதில்லை. என் மண்ணில் நடக்கும் சொந்த கதைகளை வைத்தே படம் எடுக்கிறேன். எனவே எனக்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:'எத்தனை வழக்கு போட்டாலும் ஜல்லிக்கட்டை அழிக்க முடியாது' - சசிகுமார்

ABOUT THE AUTHOR

...view details