சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் விநாயகர் சிலைகள் தாயரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ட்ரெண்ட்டிங்கில் இருக்கும் விஷயங்களை வைத்து விநாயகர் சிலையை வடிவமைப்பார்கள்.
அதன்படி புஷ்பா, பாகுபலி போன்ற திரைப்படங்கள் வெளியீடு சமயத்தில் அப்படங்களின் கதாபாத்திரங்களைப் போன்ற விநாயகர் சிலைகள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்து பார்ப்போரை கவரும் வகையில் இருக்கும். அதேபோல் இந்த ஆண்டு சென்னையில் இரண்டு விநாயகர் சிலைகள் காண்போரை கவர்ந்து வருகிறது.
சென்னை கொருக்குபேட்டையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளால் உருவாக்கப்பட்டு வரும் இரண்டு விநாயகர் சிலைகள் மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லியோ திரைப்பட அறிவிப்பின்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் போன்று ஒரு பக்கம் விநாயகரும், மறுபக்கம் சிங்கமும் இருப்பதை போன்ற சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு சிலை, லியோ திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு வீடியோவில் நடிகர் விஜய் Bloody Sweet என்று கூறும் காட்சியை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை பொதுமக்களை கவர்ந்து வருகிறது. மேலும், இந்த சிலை 70 ஆயிரம் ரூபாய் செலவில் 8 அடி உயரமும் கொண்டதாக கூறப்படுகிறது. சுமார் 25 நாட்களாக, ஐந்து சிலை வடிவமைப்பு கலைஞர்களைக் கொண்டு இச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 30ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இதையும் படிங்க: எஸ்ஏ சந்திரசேகரை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்!