எஸ்ஏ சந்திரசேகரை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்!

எஸ்ஏ சந்திரசேகரை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்!
SAC - Bussy Anand met: இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வு எடுத்து வரும் நிலையில், அவரை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று உடல்நலம் விசாரித்துள்ளார்.
சென்னை: இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் சமீப காலங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்ட எஸ் ஏ சந்திரசேகர், தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வெடுத்து வருவதாக தெரிவித்திருந்தார். இது விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
-
பிள்ளைகள் ஒன்று சேரும் போது
— S A Chandrasekhar (@Dir_SAC) September 15, 2023
பெற்றோருக்கு மட்டும் அல்ல
மொத்த குடும்பத்துக்கே
வலிமை கூடுகிறது.🙂🙂 pic.twitter.com/OvXS9AZR2J
ஆடியோவில் எஸ்ஏ சந்திரசேகர் பேசியது ”சில நாட்களாக எனக்கு உடலில் அசௌகரியங்கள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்ததில் அவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இதனால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். தற்போது எந்த பிரச்னையும் இன்றி ஓய்வு எடுத்து வருகிறேன். நீங்களும் உங்களது உடலை பார்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு பிரச்னையும் வரும் முன் காத்துக்கொள்ள வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள வெங்கட் பிரபு படத்தின் தயாரிப்பு பணிகள் காரணமாக வெளிநாடு சென்றிருந்த நிலையில், சமீபத்தில் சென்னை திரும்பினார். சென்னை திரும்பியதும் தனது அப்பாவை சென்று பார்த்து, உடல்நலம் குறித்து விசாரித்து வந்தார்.
இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. சமீப காலமாக விஜய்க்கும், அவரது அப்பாவிற்கும் பிரச்னை என்று தகவல்கள் வெளியானது. எஸ்ஏ சந்திரசேகரும் ஊடகங்களில் அதனை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், எஸ் ஏ சந்திரசேகரை நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். இது குறித்து இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ”பிள்ளைகள் ஒன்று சேரும்போது பெற்றோருக்கு மட்டும் அல்ல மொத்த குடும்பத்துக்கே வலிமை கூடுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் நடிகர் விஜய்யை அரசியலுக்கு வர வைப்பதில் எஸ்ஏ சந்திரசேகர் மிகவும் ஈடுபாடு காட்டினார். அதனால் விஜய் தனது தந்தையுடன் பேசுவதை குறைத்துக் கொண்டார். விஜய் தன்னுடன் பேசாததற்கு புஸ்ஸி ஆனந்த்தான் காரணம், எனது மகனை அவர் தவறாக வழிநடத்துகிறார் என்று எஸ்ஏ சந்திரசேகர் அப்போது குற்றம் சாட்டினார்.
தற்போது விஜய் தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டி வருவதாக அறியப்படும் நிலையில், அதற்கு புஸ்ஸி ஆனந்த் பக்கபலமாக செயல்படுகிறார் என விமர்சகர்கள் கருதும் சூழலில், தற்போது புஸ்ஸி ஆனந்த் எஸ் ஏ சந்திரசேகரை சென்று பார்த்துள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
