சென்னை:நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையான முறையில் பேசியதற்கு, திரைப் பிரபலங்கள் உட்படப் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், நடிகர் மன்சூர் அலிகான் இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்க மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, நடிகர் மன்சூர் அலிகான் மீது பெண்களை பாலியல் ரீதியாகப் பேசுதல் உள்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று (நவ.23) ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து, பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, தனது சமூக வலைத்தள பக்கத்தில், த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டு இருந்தார். மேலும், அச்சம்பவம் குறித்தும், தேசிய மகளிர் ஆணையத்தின் நடவடிக்கை குறித்தும், பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்குத் தொலைப்பேசி மூலம் பேட்டி அளித்து இருந்தார்.
அவர் அளித்த பேட்டி சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. அதற்குப் பல தரப்பட்ட மக்கள் தங்களில் விமர்சனக் கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். அதில், பெரும்பாலான மக்கள் மணிப்பூர் சம்பவத்திற்கும், டெல்லியில் நடந்த வீராங்கனைகள் போராட்டத்திற்கும் மௌனம் காத்த குஷ்பு, தற்போது, இந்த விவகாரத்தில் முனைப்போடு செயல் படுவதை ஒப்பிட்டு, விமர்சித்து கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
குஷ்பு பக்கம் திரும்பி சர்ச்சை: அதில் ஒருவர், மணிப்பூரில் பெண்கள் மீது நடந்த வன்கொடுமையில் போது குஷ்பு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் தூங்கிக் கொண்டு இருந்ததாகவும், தற்போது, நடிகை த்ரிஷாவுக்காக குரல் கொடுப்பதெல்லாம் அரசியல் லாபத்திற்கான செயல் என்று பதிவிட்டிருந்தார்.