சென்னை: நடிகை த்ரிஷா குறித்து, நடிகர் மனுசூர் அலிகான் சில நாட்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்து சமூக வலைத்தளத்தில் பரவியது. இதையடுத்து மன்சூர் அலிகான் பேச்சுக்கு நடிகர் த்ரிஷா தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்தார்.
மேலும் நடிகைகளும், நடிகர் சங்கமமும் த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேநேரம், நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார் எனவும் தெரிவித்தனர். ஆனால், மன்சூர் அலிகான் தரப்பிலிருந்து, தான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை எனவும், தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியது. மேலும், இது தொடர்பாக டிஜிபிக்கு புகார் கடிதம் ஒன்றையும் தேசிய மகளிர் ஆணையம் அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில், சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகான் மீது பெண்களை பாலியல் ரீதியாக பேசுதல், கொச்சைப்படுத்தும் வகையில் பேசி தற்கொலைக்குத் தூண்டுதல் என இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், இன்று சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான், இன்று காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என 41 ஏ என்கிற நோட்டீஸும் நேற்று அவருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி, தான் அளித்த பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், நடிகை த்ரிஷா குறித்து எந்த அவதூறான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதால் வழக்கை ரத்து செய்து, தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதையும் படிங்க: இசையமைப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தீனா போட்டியிடுவதில் என்ன பிரச்சினை? இளையராஜா ஆடியோவால் பரபரப்பு!