தமிழ்நாடு

tamil nadu

சென்னை கோட்டத்தில் ரயில்வே பொது மேலாளர் ஆய்வு!

By

Published : Jan 28, 2021, 1:10 PM IST

சென்னை கோட்டத்தில் ரயில்வே பொது மேலாளர் ஆய்வு!

சென்னை: அரக்கோணம், ராணிப்பேட்டை, வாலாஜா பகுதியில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை கோட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், ரயில்வே துறை தலைமை அலுவலர்கள், கோட்ட மூத்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். ரயில்வே சொத்துக்களை பாதுகாத்து கண்காணிக்கவும், ரயில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாகவும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

செங்கல்பட்டு, அரக்கோணம், வாலாஜா சாலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஜன. 28) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், முக்கிய இயந்திரங்களின் செயல்பாடு, இன்டர்லாக்கிங் சிஸ்டம், தற்போது கட்டுமானத்தில் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்தம், நடைபாதை விளக்குகளின் செயல்பாடு, பொதுமக்களுக்கான கழிவறை, தண்ணீர் வசதி உள்ளிட்டவை குறித்து ஜான் தாமஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், வயதான பயணிகளுக்காக பேட்டரியில் இயக்கப்படும் கார் சேவையை அவர் தொடங்கி வைத்தார். வாலாஜா சாலை ரயில் நிலையத்தில் வாகனங்கள் ஏற்றிச் செல்வதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள மையத்தை அவர் பார்வையிட்டார். பின்னர், காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய கட்டுமான பணிகள் குறித்து அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வு பயணத்தின்போது பல்வேறு பகுதிகளில் உள்ள பொறியியல் கருவிகள், சிக்னல் கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள், ரயில்வே கிராசிங் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். கேட் கீப்பர்கள், தண்டவாளத்தை பராமரிப்பவர்கள், பொறியியல், சிக்னல், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த ஊழியர்கள், ரயில் பயணிகள், ரயில் பயணி அமைப்புகள் ஆகியோரிடம் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கலந்துரையாடினார். இதில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு அந்த இடத்திலேயே விருதுகளும் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க...முதலமைச்சர் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details