தமிழ்நாடு

tamil nadu

இது தனி வழி.. சென்னை விமான நிலையத்தில் இனி போக்குவரத்து நெரிசல் ஏற்படாது!

By

Published : Nov 29, 2022, 12:14 PM IST

சென்னை விமான நிலையத்தில் இனி போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தனி வழி.. சென்னை விமான நிலையத்தில் இனி போக்குவரத்து நெரிசல் ஏற்படாது!
இது தனி வழி.. சென்னை விமான நிலையத்தில் இனி போக்குவரத்து நெரிசல் ஏற்படாது!

சென்னை: கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை விமான நிலையத்தில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. விமான நிலையம் மூடல், விமானங்களின் எண்ணிக்கை குறைவு, பயணிகளின் குறைவான வருகை, மருத்துவ பரிசோதனை, முகக்கவசம் கட்டாயம், சமூக இடைவெளி உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன.

தற்போது கரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கையும் விமானங்கள் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

ஏற்கனவே கரோனா காலத்துக்கு முன் 2018ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு சுமார் 8,000 வாகனங்கள் வந்து சென்றன. ஆனால் தற்போது சுமார் 12,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. எனவே கரோனா காலத்துக்கு முன்பை விட தற்போது வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இனி போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்

இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் வாகனங்களின் போக்குவரத்து மற்றும் நெரிசல் அதிகரித்துள்ளது. சென்னை சர்வதேச முனையம், உள்நாட்டு முனையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும், ஒரே பகுதி வழியாக வந்து வெளியேறுவதால் அங்கு வாகனங்களின் கட்டணம் வசூலிக்கும் இடங்களில் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இதை பயன்படுத்தி சில வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் வெளியேறும் சூழலும் உருவாகிறது. இதை தவிர்ப்பதற்காகவும், நெரிசலை குறைப்பதற்காகவும், சென்னை விமான நிலையத்தில் தற்போது புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை விமான நிலைய அலுவலர் ஒருவர் கூறுகையில், “உள்நாட்டு விமான முனையத்திற்கு வரும் வாகனங்கள் வந்து விட்டு மற்றொரு வழியாக திரும்புவதற்கும், அதேபோல் சர்வதேச விமான நிலையத்திற்கு வாகனங்கள் வருவதற்காகவும், அந்த வாகனங்கள் வெளியே செல்வதற்காகவும் புதிதாக வழிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னை விமான நிலைய காவல் நிலையம் அருகே இந்த புதிய வாகன வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூல் செய்வதற்காக கவுண்டர்களும் கூடுதலாக தனித்தனியாக அமைக்கப்படுள்ளது.

மேலும் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு தனியாகவும், சர்வதேச விமான நிலையம் இணையத்திற்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சென்னை விமான நிலையத்தில் வாகன நெரிசல்கள் பெருமளவு குறையும். குறிப்பாக சர்வதேச முனையத்தில் இரவு நேரங்களிலும், அதிகாலைகளிலும் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசல் பெருமளவு இருக்காது. விமான நிலைய காவல் நிலையம் அருகே புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வழிகளில், கட்டணம் வசூல் செய்யும் கவுண்டர்கள் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.

ஏற்கனவே 250 கோடி ரூபாய் செலவில் 2,000 வாகனங்கள் நிறுத்தும் விதத்தில் கட்டப்பட்டுள்ள ஆறு அடுக்கு கார் நிறுத்தம் செயல்பாட்டுக்கு வரும்போது, இந்த புதிய கட்டண வசூல் கவுண்டர்களும் செயல்பாட்டுக்கு வரும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:சர்வதேச வழித்தடத்தில் பறக்க தயாராகும் ஏர் இந்தியாவின் முதல் போயிங் விமானம்...

ABOUT THE AUTHOR

...view details